இறுதி நேரத்தில் நீண்ட நேரம் உங்கள் பெற்ற தாயை பற்றோடும் இனி எப்போ என்ற தோரணையில் பரிதவிப் போடும் உங்கள் பூவிழிகள் திறந்த வண்ணம் உற்றுநோக்கி நீங்களே. இறுதியில் பூவிழிகள் மெல்ல மூடி தாயின் கைபட்டு ஒரு கவளம் நீர் பருகி, விரைந்து சென்று மறைந்தாயே தெய்வமகனே. அருமை தம்பி தவிக்கிறார் உங்களை காணாமல். உங்கள் இனிய தங்கை எத்தனையை தாங்குவது, பிஞ்சு உள்ளம் ஏங்கித் தவிக்கிறது. அம்மா அப்பா கண் விழித்ததும் தினமும் நெஞ்சம் உருகி குமறி பார்க்கும் திசையெல்லாம் செல்லுமிடமெல்லாம் பழகும் விதம் எல்லாம் உங்கள் நினைப்பே நிறைந்த வண்ணம் உள்ளது .உங்கள் சிறு பிராயம் தொட்டு தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டு கும்பிடும்போது எம் மனதில் நல்ல அபிப்பிராயம் தும்பிக்கையான் என்றும் நல்வழி துணை நிற்பார் என்று தோன்றும் நம்பினோம். சாவதற்கும் நோயின் தொல்லையில் அவஸ்தைப்படுவதற்கும் வயதெல்லை வேண்டாமா? நினைப்பதெல்லாம் நடக்கும் என்றால் தெய்வம் ஏதுமில்லை. எங்கள் ராஜகுமாரா தீராத கவலையிலும் கொடும் வேதனையிலும் ஒரு கணம் அப்பாவுக்கு உங்கள் தற்காப்பு திறமைகளை செய்துகாட்டி, புன்னகையுடன் மகிழ்ந்தாயே எங்கள் செல்வமே. தங்கத்தமிழ் பாவலனே உங்கள் நெஞ்சுரம் கண்டோம் தமிழும் ஆங்கிலமும் அழகு சொல்வண்ணம் கண்டோம். பொய் இல்லாத மெய் வண்ணம் கண்டோம். தோள் வண்ணம் கண்டோம். கால் வண்ணம் கண்டோம். கை வண்ணம் கண்டோம். மெய்சிலிர்த்து மலைத்துப் போனோம். உங்களோடு சேர்ந்து இருக்க வேண்டி ஏங்குது மனது. முடியாது என்று நினைக்கையில் மனது தாங்கவில்லை. துள்ளி நடந்தாய் எம்மை அள்ளி அணைத்தாய். ஈற்றில் கொள்ளி வைத்தும் இன்று தள்ளி நிற்கின்றோம். எம் உள்ளம் எம்மை எள்ளி நகை கொள்ளுது. வள்ளி தெய்வானை மணாளனே, எங்கள் ராசாவுக்கு ஏன் இப்படி முற்றுப்புள்ளி? இன்முகம் காட்டி பகிர்ந்து உண்பது தமிழர் பண்பாடு. அதுவே நம் விருந்தோம்பலின் முதல் அத்தியாயம் என்று பண்பின் சிறப்பை பொழிந்தவரே உங்கள் நாமம் வாழ்க. என் கதை முடியும் நேரம் எப்போ? முடியும்வரை எழுதுகிறேன் முடிவிலும் மனதில் அமைதியில்லை. என்னை விட்டால் பின்னைக்கு தன்னை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நிறைவாக நம்பிய உங்கள் அன்னையின் கதியென்னே! அன்னை முத்துமாரி அம்மாவே நாம் கைநழுவிப் போனோமா? எங்கள் ராசாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். ஓம் சாந்தி
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...