யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாரிடம் சொல்லி அழுவேன் என் மனகுமுறலை
இனி யாரிடம் உன் அழகு முகம் காணுவேன்
இனி யாரிடம் என் கதை கூறுவேன்
இனி யாரிடம் உன் அன்பைத் தேடுவேன்
அம்மா! என் தர்சினியே!!!
இப்போது நான் தனிமையில் தத்தளிக்கும் தனி மரமானேன்
நீ என்னை விட்டு சென்றதால்
என் அன்பே என்னால் தாங்க முடியவில்லை உன் இழப்பை
தள்ளாடுகிறேன் தவிக்கிறேன் உன் துணையின்றி
இன்பம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தையே
உன்னால் தான் நான் உணர்ந்தேனம்மா
ஆனால் என் இன்பத்தை என்னை விட்டு இழுத்து சென்று
தவிக்க விட்டதன் மர்மம் என்ன
உன்னை இழந்து என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை
இருந்தும் வாழ்கின்றேன் எனக்காக நீ
பரிசளித்த உன் இரு கண்மணிகளுக்காக
உன்மடி மீது சாய்ந்திட தேடுது என் கண்கள்
உன் கரம் கோர்த்து நடந்திட தேடுது என் கால்கள்
நீ எங்கிருப்பாய் எப்படி இருப்பாய் என ஏங்குது என் இதயம்
நீயின்றி நான் எப்படி வாழ்வேன் அம்மா
இருந்தும் வாழ்கிறேன் உன் நினைவோடு!
உலகிற்கு நீங்கள் எங்கள் அம்மா ஆனால்
எங்களுக்கு நீங்கள் தான் அம்மா உலகமே
ஆயிரம் உறவுகள் எங்கள் மீது அன்பாக இருந்தாலும்,
அம்மா உங்கள் அன்புக்கும், அரவணைப்பிற்கும் எதுவும் ஈடாகாது.
நாங்கள் தூங்கும் வேளையில் இருமினால் கூட துள்ளி எழுவேங்களே
அழுத போதெல்லாம் முத்தம் இட்டு தலை சாய்க்க உங்கள் மடி தருவீங்களே
ஆனால் இப்பொழுது, தலையனை தாய் மடி ஆனதே.
உங்களால் ஒரு நிமிடம் கூட எங்களை பிரிந்து வாழ முடியாதே அம்மா
அப்படி இருக்கும் போது எவ்வாறு நாங்கள் உங்களை வாழ்நாள் முழுதும்
பிரிந்து இருப்போம் என்று எண்ணி எங்களை விட்டு சென்றீர்கள் அம்மா
உங்கள் பிறந்த நாள் அன்று பரிசு கொடுப்பதற்கு
எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை
அதனால் உங்கள் பிறந்தநாள் அன்று எங்களுக்கு
பரிசாக ஒரு வரம் கேட்கின்றோம்
எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும்
உங்கள் பிள்ளைகள் ஆகும் வரம் வேண்டும்
நீங்கள் பிரிந்த நாள் முதல் இன்று வரை அன்பிற்காக
ஏங்கி கண்ணீர் விட்டு காத்து இருக்கும்
உங்கள் அன்புச் செல்வங்கள்.
உங்கள் கீர்த்திமா, அச்சுனீ
ஆண்டு ஒன்று சென்றும் இன்னும் எங்களால் ஆறவில்லை
உன் துயரம் அன்பு மகளே! அருமை சகோதரியே!
எங்கள் அருகில் கடைசி வரை நீ இருப்பாய் என்று
நாங்கள் எண்ணி இருக்க எம் கனவுகளை உடைத்து
வெகு விரைவில் எங்கு சென்று விட்டாய்?
காலத்தால் அழியாத உன் அழகு முகமும், புன்னகையும்
காணாமல் துடியாய் துடிக்கின்றோம்.
மீண்டும் ஒரு முறை எப்போது நீ வருவாய்
எங்களை எல்லாம் ஒன்று கூடி அரவணைக்க
என இங்கு கதறி அழுகின்றோம்.
ஒவ்வொரு நாட்களும் நகர்ந்து சென்றாலும்
உன் நினைவுகளையும், எம் கண்களில்
ஆறாய் ஓடும் கண்ணீர் துளிகளையும்,
இன்னும் எங்களால் நிறுத்த முடியவில்லை.
தங்க மகளே! ஆசை சகோதரியே!
எங்கள் மனதில் பிரிக்க முடியாதவளாய்
என்றென்றும் நீ இருப்பாய்.
அன்பின் இலக்கணமாய் திகழ்ந்து,
பாசத்தின் வதிவிடமாய் வாழ்ந்து,
அழகின் சொரூபியாய் வலம் வந்து,
வீடு தேடி வந்தோரை இன்முகத்தோடு வரவேற்று,
விருந்தோம்பும் எங்கள் வீட்டின் மகாலக்ஷ்மியே !!!
இனி எப்போது உங்களை காண்போம்?
இன்னும் உங்கள் இழப்பை எங்களால்
ஜீரணிக்க முடியாமல் தவியாய் தவிக்கிறோம்.
நீங்கள் எங்களை விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று தான், ஆனால் நாங்களோ
உங்களை பிரிந்து பல யுகங்கள் சென்றது போல் உணர்கிறோம்.
நீங்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பொறுப்பும்,
அக்கறையும் இனி யாரிடம் நாம் பெறுவோம்?
நீங்கள் சென்ற நாள் முதல் இன்று வரை
நாம் தவிக்கும் தவிப்பு யார் அறிவார்?
நீங்கள் இல்லாமல் எங்கள் குடும்பம் பூரணமின்றி தவிக்கிறது.
நெஞ்சம் உருகி நின்று ஆண்டவரை வேண்டுகின்றோம்
நீங்கள் எப்போதாவது திரும்பி வர மாட்டீர்களா என்று.
புன் சிரிப்பினால் எல்லோரையும் கவர்ந்து,
யார் மனதையும் புண்படுத்தாமல்,
எல்லோர்க்கும் உதவும் உங்களை காலவன்
ஏன் எங்களிடம் இருந்து இழுத்து சென்றான்?
கலங்கரை விளக்கம் இல்லாத
கடலில் தத்தளிக்கும் கரை சேராப்படகுகள் போல்
உங்கள் குடும்பம் தத்தளிக்கிறதே நீங்களின்றி.
அவர்களை கரை சேர்க்க
நீங்கள் தான் எங்கிருந்தாலும் வழி காட்டவேண்டும்.
உங்களின் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...