விடியாது போன இரவு °°°°°°°°°°°°°°°°°°°°°°°°° எம் வாழ்க்கை எனும் வான வீதியில் - தினமும் முத்துப்பற் சிரிப்போடு முழுவதனம் காட்டி நிறைவைத்தந்த நிலவே சுவீக் ஷா..! இன்று மட்டும் ஏன் எங்கள் வானம் வாழ்விழந்து கிடக்கிறது? வாராயோ..! மறுபடியும்... அத்தனை இதயங்களையும் அடித்து நொருக்கிவிட்டு வெறுமனே கடந்து போகிறதே கருணையற்ற மரணம்... ஏழு வயதுக் குழந்தையுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று - உன் தாய் கற்றுத்தரவில்லையே காலனே..! இந்தப்புன்னகையை - நீ பார்த்த பின்னுமா பறிக்க முடிந்தது இவளின் இன்னுயிரை... ஆற்றுப்படுத்த முடியாத - எமது ஆதங்கத்தை உன்னில் கொட்டித்தீர்ப்பதற்கு கோடிவருடங்கள் வேண்டும் பாதகா..! நீ எரிந்து போவாயென சபிக்கக்கடவது... மகளே சுவீக் ஷா..! தென்றலாய் எமை வென்ற தேவதையே..! உனை தாங்கிச் சுமந்த தாயின் கண்ணீருக்கும் - மார்பில் ஏந்தி நடந்த தந்தையின் குமுறலுக்கும் எப்படி நான் ஆறுதல் சொல்ல..? அவர்களை எப்படித்தான் ஆற்றுப்படுத்த..? காலன் உன்னை கையசைத்து(க்) கூப்பிட்டாலும் போடி...என் செல்ல மகளே - நீ போயிருக்கக் கூடாது... போயிருக்கவே கூடாது... காலனையும்... காலத்தையும்... வென்று வா கண்ணே..! கண்ணீரோடு காத்திருக்கிறோம்... என்றும் உந்தன் நினைவுகளோடு...... நிரஞ்சலன்