யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து வருடங்கள் ஆனதுவே எமையளவிட்டு....
அன்பிற்கும், பாசத்திற்கும், பண்பிற்கும்
முழு உருவமாய் எம்மத்தியில் கலகலப்பான பேச்சுடனும்,
கனிவான புன்னகையுடனும்
அன்பு ஒளியாய் விளங்கிய உத்தமனே !
எம்மை அழவிட்டு எங்கு சென்றீர்கள்!!
காற்றோடு கரைந்து போயின காலங்கள்.
தோற்றுப் போயின எம் கனவுகளும் எதிர்பார்ப்பும்
உம்மை நாம் இழந்த துயரை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்.
ஆறிடுமோ எம் துயரம்?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
உம் உறவுக்கு நிகர் யாருமே இல்லை.
நீங்கள் எம் குடும்பக் கவசம் ஐயா.
நீங்கள் அனைவராலும் போற்றப்பட்டீர்கள், பாராட்டப்பட்டீர்கள்.
அன்பால், பண்பால்,
எல்லோர் மனதையும் நிறைத்தீர்கள்.
நீங்கள் எங்கள் வலுவான ஆலமரம் என வாழ்ந்த போது
காலன் அந்த வேரை எரித்ததேனோ ?
உலகம் சுற்றிக்கொண்டே இருக்கின்றது ஆனால்,
நம் வாழ்க்கை மட்டும் உறைந்து விட்டது.
உண்மையான மகிழ்ச்சியையும்,
அமைதியையும் இழந்தோம் ஐயா.
உலகம் அயர்ந்து தூங்கும் போதும்
உங்களுக்காக நாங்கள் விழித்திருக்கின்றோம்
மனவலியுடன் உம் முகம் காணமாட்டோமா என...
நாம் உம்மைக் காணமாட்டோம் என்பது ஒருபோதும் நீங்காத மனவலி.
அன்பை விதைத்து விட்டு அறுவடை
செய்யாமல் எங்கு சென்றுவிட்டீர் ஐயா?
உங்கள் பெற்றோரின் நம்பிக்கை உடைந்து விட்டது.
உடன் பிறந்தவர்களின் ஆசைகள் தொலைந்து விட்டது.
மனைவியின் கனவுகள் மறைந்து விட்டது.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் "அப்பா" என்றழைக்க,
அரவணைத்து முத்தமிட்ட அன்புக்கரங்கள் எங்கே என
ஏங்கித் தவிக்கின்றனர் உங்கள் மகன்மார்கள்.
இதற்கெல்லாம் யார் நமக்குப் பதில் சொல்வார்கள்??
விதி ஏன் எங்களுடன் விளையாடியது??
எமைப் பிரித்த ஆண்டவன் செயலை எண்ணி ஆறிட முடியவில்லை.
எப்போதும் கனத்த இதயத்துடன் உமைத்தேடும் எம் கண்கள்.....