Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 13 APR 1962
இறைவன் அடியில் 20 JUN 2022
அமரர் இராசையா நித்தியானந்தன்
வயது 60
அமரர் இராசையா நித்தியானந்தன் 1962 - 2022 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நித்தியானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.

நெஞ்சில் கனக்கும் சில வரிகள்:

தங்கத்தலைமகள் என்றனையளைக்கும் என் அப்பா! உங்களோடு அருகில் வாழ்ந்த காலங்கள் குறைவென்றாலும் தந்தைப் பாசத்தை அள்ளியே தந்தீர்கள் மார்பில் தவழவில்லை மடியில் தூங்கவில்லை தூரத்திலிருந்தே உங்கள் பாசத்தைப் பேனா நட்பின் மூலம் பலமுறை பெற்றேன். நீங்கள் என்னருகில் வந்தபோது நான்பிரியும் வேளை தொடர்ந்தும் தொலைபேசிலேயே தந்தை, மகள் அன்பு தொடர்ந்தது.

ஆயினும், அம்மாவோடு நீங்கள் இருக்கின்றீர்கள் என்றெண்ணி சிறிதேனும் மகிழ்வுடனே நான் வாழ்ந்திருந்தேன். உங்கள் நித்தியப்புன்னகையினாலும், மிடுக்கான பேச்சாலும் பலகதைகள் சொல்லி என்னை உங்களன்பினால் கட்டிப்போட்டே வைத்திருந்தீர்கள். உங்கள் கவியாற்றலையும், விளையாட்டுத் திறமைகளையும், தத்துவ வரிகளையும் நான் மறக்கவில்லை. இனிமேல் நிரந்தரமாகக் கிடைக்காதென்று தெரிந்தும் அவற்றையெல்லாம் திரும்ப திரும்பத் தேடுகின்றேன்.

நிரந்தரமற்ற வாழ்க்கையில், நிரந்தரமென்றெண்ணி நாம் உங்களை இறுதிவரை இறுக்கியே பிடித்திருந்தோம். ஆனாலும் நீங்கள் சொல்லும் இயற்கையன்னையின் முடிவால் நீண்டதூரம் சென்றீர்கள். நெஞ்சிலிருக்கும் கனத்தவரிகளை சொற்களால் போடமுடியவில்லை எனக்கு. ஏதோ உணர்கிறேன் என்னவென்று புரியவில்லை. இடையில் வந்தீர்கள் அதற்கிடையில் சென்று விட்டீர்கள். அப்பா பாசம் கிடைக்காமல் நிறயவே அழுதிருந்தேன். இப்போ நிரந்தரமாகவே அழவைத்து விட்டீர்கள்.

அதனாலோ என்னமோ என்னை என்னுறவுகள் அனைவரும் மிக அதிகமாகவே நேகிக்கின்றார்கள். அவையாவும் உங்கள் மூலம் பெற்ற அன்பென்றே நான் உணர்கின்றேன். உங்கள் வயலும் வரப்பும், மாடுகன்றுகளும், சிம்மியா(நீங்கள் வளர்த்த நாய்க்குட்டி) அனைத்தும் உங்களைத் தேடுகின்றதப்பா. திரும்பவும் உங்கள் கால்தடத்தை காண ஏங்குகின்றதப்பா.

உங்களையே தஞ்சமென்றெண்ணியிருந்த என்னம்மாவிற்கு என்ன சொல்லிச்சென்றீர்கள்? இறுதிவரை அவரை இருகரமும் இறுக்கபிடித்து இறுதியாக சென்றபோது என்ன சொல்ல நினைத்தீர்களோ? எழுதவார்த்தையிமில்லை, சொல்ல வரிகளுமில்லை நெஞ்சுக்குளிருக்கும் பாரத்தை எப்படி வெளிக்கொணர்வதென்பது தெரியாமல் தவிக்கின்றேன் நான் இங்கே.

உங்கள் உடம்பின் உபாதையறிந்தும் ஒன்றுமே இல்லாதவர் போல மனத்துணிவோடு இருந்தீர்களே அப்பா இதுவெல்லாம் எல்லோராலும் முடியாதப்பா. நான் திரும்ப வருவேன் என்று சொன்னபோது என்னைப்பார்த்து ஒருபோதும் அழாத நீங்கள் விம்பியழுதீர்களே ஏன் என்று இப்போதறிந்தேனப்பா. அப்போதும் அப்பா நலமுடன் இருப்பார் நீங்கள் திரும்பவாருங்கள் என்றே சொன்னீர்கள் ஆனால் அப்பாவைப் பார்க்க கடைசியாக வருவேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

உங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் என்கண்முன்னே ஆயிரம் கதை சொல்கிறது எப்படியென்று என்னால் சொல்ல முடியவில்லையப்பா. மலர்ந்தும் மலராமலும் தொட்டும் உணராமலும், பட்டும் படாமலும் வந்த உறவே நம் அப்பா, மகள் உறவு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இயற்கையன்னையைப் பிரார்த்திக்கின்றேன் உங்கள் அன்புக்காக ஏங்கும் தங்கத் தலைமகள்

(இதுவே நீங்கள் எனையழைக்கும் பெயர்)

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.