முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-07-2013
வண்ணக் குழந்தையாய்
கார்மேகக் கண்ணனாய்
என் அப்பம்மாவின் வயிற்றிலே
ஐந்தாவது சிங்கமாய்
அவதரித்த என் அன்பான அப்பாவே!
சேர்ந்து வாழவில்லை பலகாலம்
சிரித்து மகிழ்ந்ததும் சிலகாலம்
அதில் எம்முள் இருக்கும்
நினைவுகளோ பலகோடி!
ஆயுளும் முடிந்தது
ஆயுள் ரேகையும் அழிந்தது
பறவையும் பறந்தது
என் இறக்கையும் ஒடிந்தது
வாழ்வும் வீழ்ந்தது
வசந்தமும் கலைந்தது!
வாசலிலே நின்று எமை
அன்புடனே வரவேற்கும்
என் அன்புத் தந்தையே
இன்று வெற்றிடமான வாசலையும்,
தனிமரமான என் அம்மாவையும்
பனித்த கண்ணோடு
என்னைப் பார்க்க வைத்ததும் ஏனோ!
கனிவான பார்வையையும்
கம்பீரத் தோற்றத்தையும்
கணீர்ப்பேச்சையும்
கள்ளமற்ற சிரிப்பையும்
மிடுக்கான உங்கள்
திரண்ட மீசையையும்
திரும்பப் பார்க்க கிடைக்குமா
என தேடியலைகின்றேன்
தினமும் நானிங்கே.
என் ஆசை அப்பாவே!
இது யாவும் வெறும் கற்பனை
வரிகள் அல்ல.
உங்கள் கவி ஆற்றலில்
கிடைக்கப் பெற்ற
சில வரிகொண்டு உங்களை
வடிவமைத்து நினைத்துப் பார்க்க
உங்கள் தங்கத் தலைமகளால்
எழுதப்படும் சிலதுளி வரிகளே
இவை யாவும்.
வரிகளிலே பயணித்த நாமிருவரும்
இடையிலே இணைந்தபோது
அதுவே நீடிக்கும் என்றெண்ணி
உவகையோடு நானிருந்தேன்
இறைவனடியிலே அஸ்தமித்த
உங்களை அதே வரிகொண்டு
திரும்பவும் தேடுகின்றேன்...
உறவுகளென்று ஆயிரம் இருந்தாலும்
அப்பா என்றழைக்க ஓர் உறவு மட்டுமே
மகிழ்வோடு அவ்வுறவு தொடர்ந்தே கிடைக்குமென்று
இப்பவனியிலே மகிழ்வுடனே வலம் வந்தோம்
பாதி வழியில் பாதி வயதில்
பரிதவிக்கவிட்டுப் போவீர்களென்று
சிறிதளவேனும் நினைக்கவில்லை.
வீசும் தென்றலிலே உங்களைத் தேடுகின்றேன்
ஒரு வார்த்தை கேட்பதற்கு.
இறுதியாக உங்களைக் கண்ட
நிமிடங்களை என்னால்
மறக்க முடியவில்லையப்பா
எனைப்பார்த்து நீங்கள்
தேம்பி அழுததை மனதிலிந்து
நீக்க முடியவில்லையப்பா.
கனவில்கூட ஒரு தடவை வருவீர்களா
என்று தினமும் ஏங்கித் தவிக்கின்றேன் நானிங்கே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி...