தமிழ்ப்பிரியா அவர்களின் மறைவு குறித்த அனுதாபச் செய்தி... பிரான்சில் நீண்டகாலமாக வசித்துவந்த தமிழ் இலக்கியவாதியான தமிழ்ப்பிரியா (திருமதி புஸ்பராணி இளங்கோவன்) அவர்களின் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இவருடன் இறுதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் உரையாடியிருந்தேன். 2010ஆம் ஆண்டு, பாரிசில் எனது தந்தையாரின் மூன்று நூல்கள் வெளியீட்டை நான் நிகழ்த்தியபோது , அவர் அதில் கலந்துகொண்டு , "தன்னேர் இலாத தமிழ்" என்ற நூலைப் பற்றி ,மிகச் சிறப்பான ஆய்வுரை வழங்கியிருந்தார். இன்றும் அவரின் அந்த ஆற்றோட்டமான உரை , என் மனக்கண்ணில் தெரிகின்றது. அன்று ஆவலுடன் தான் எழுதிய சிறுகதை நூல்கள் சிலவற்றையும் , எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். ஓர் சில தினங்களில் , அவற்றை வாசித்தபின் , அவரிற்கு தொலைபேசி அழைப்பு விட்டுக் கதைத்தேன். அவரின் சிறுகதைகளை நான் ரசித்து விமர்சித்ததை , மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். இன்றும் அந்த இனிமையான உரையாடல் என் மனதில் பசுமையாக உள்ளது. பலசிறுகதைகள், குறுநாவல்கள் என்பனவற்றை இவர் எழுதியுள்ளார். நீண்டகாலமாக ஈழத் தமிழுலகு நன்கறிந்த பெண் எழுத்தாளராக இவர் வலம் வந்துள்ளார். அன்பும், பண்பும் ,அறிவும், தமிழுணர்வும் மிக்க சகோதரியின் மரணச் செய்தியை இன்றுதான் ( ) அறிந்தேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவரை இழந்தது போல் உணர்கின்றேன். ஈழத்தமிழுலகில் நீண்ட காலமாக முன்னணிப் பெண் எழுத்தாளராகத் திகழ்ந்த அன்னாரின் மறைவால், துயருற்றிருக்கும் தமிழ் இலக்கிய அறிஞர்களுக்கும், அன்பு மனைவியை இழந்து தவிக்கும் அவரின் கணவருக்கும், மற்றும் உற்றார் , உறவினர் நண்பர்களுக்கும் , என் ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நீழலில் அமைதி கண்டிட , எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. ஆறாத்துயருடன்- வேந்தனார் இளஞ்சேய்