நாகராசா மாமா குடும்பம் , எங்கள் குடும்பத்து உரித்துடைய உறவுகள் . என் பால்ய காலத்து வாழ்நாட்களில் நெருங்கிய உறவாடலும் , நல்லது கெட்டதெல்லாம் இணைந்து உறவாடிய மிக நெருங்கிய இந்தச் சொந்தங்கள் எல்லாம் காலக் கொடுமையால் அங்கொன்றுமிங்கொன்றுமாகச் சோழகக் காற்றினுட் பிய்த்தெறியப் பஞ்சணைப் பஞ்சாகப் பறந்து , ஒவ்வொரு திக்கில் வாழ்கிறோம் . இன்றும் , ஶ்ரீமா காலத்துப் பஞ்சத்தை ஞாபகம் கொள்ளும்போதும் நாகாரசா மாவின் கூப்பன் கடையும் , சூட்டி மச்சானும் , நாகராசா மாமாவுமே அதிகம் ஞாபகம் . அன்று , நாகராசா மாமா கடனுக்கு உணவுப்பொருட்கள் தராமல் இருந்திருந்தால் எங்கள் வீட்டுப் பட்டினிப்பானை அடுப்பில் ஏறி இருக்காது . இன்று , பெரியராசன் , கலா , சூட்டி , கண்ணன் எல்லோரும் ஒவ்வொரு மூலையில் . நமது குடும்ப வேர்களையே நம் அடுத்த தலைமுறை அறியாதுபோன இன்றைய நிலையில் நீடித்த பாலமாக நாகராசா மாமா இருந்தார் . அவர் , எங்களூரில் எல்லாம் பஞ்சங்களையும் போக்கத் தன்னாலான உதவிகளை வழங்கிய பெருமகனார் . காலம் , எப்படியெல்லாம் நம்மைக் கடந்து பயணிக்கிறது . நாம் , இழந்தது உறவுகளை மட்டுமல்ல பிறந்த மண்ணையும், உறவுகளையும் இழந்தது கொடுமை . சுற்றமில்லை , சூழல் இல்லை ; சொந்தம் -பந்தம் எதுவுமே புரியாது போன இந்தச் சூழலுள் நாகராச மாமாவின் இழப்பும் காலத்தில் எப்படியோ அறியக் கிடைத்தது . அவர் நித்தியமான இயற்கையின் விதியோடு கலந்து இயங்கட்டும் . — ப.விஐயரட்னம் ஶ்ரீரங்கன்
It is a privilege to honor the incredible legacy of Mr. Nagarasa, who blessed the world with 99 years of wisdom, kindness, and joy. A life spanning nearly a century is a rare gift, and his...