இதய அஞ்சலி!! இனிய சாந்தனே இமைக்க மறந்ததேன்? சிரித்த முகமன்றி வேறு முகமறியாய் நற்பேறான புத்திரனாய் பெற்றவர்க்கு உற்றபெருந் தூணாய் உடன்பிறந்தோர்க்கு வற்றாத அன்பினையே அமுதாய்ப் பொழியும் காதல் கணவனாய் உன்னவளுக்கு நாடறிந்த நற்கொடையாளனாய் ஊரவர்க்கு பெயர் சூட்டி பேணிவளர்க்கும் உயர் தந்தையாய் மாசற்ற நட்புடனே நீ சேர்த்த நண்பர்களோ ஏராளம் உழைத்தாய் உயர்ந்தாய் ஏன் விரைந்தாய்? எப்போதும் மலர்ந்த முகம் வரவேற்கும் உயர்ந்த குணம் வகைதொகையாய்க் கணக்கின்றி உறவுகளை உன்வசமாய் ஈர்த்து நின்றாய். வேரறுந்த மரம் போல உன்குடும்பம் குலைந்து நிற்கும் வேதனையை எங்குரைப்போம்?எழுந்து வா சாந்தனே! ஆலமரம் போல அகன்று நிற்கும் உறவுகளும்,அறுகம் வேரெனவே உயிர்த்து நிற்கும் உன் துணையுடனும் நிறைவான வாழ்வு பெற்று வளமாக வாழ்ந்த உந்தன் வசந்தத்தைக் கொள்ளை போல் வந்து கொரோனா தின்றதுவோ? நான்கு புது மலர்கள் நலமாய் வளர்ந்து உன்னை நற்றூணாய்த் தாங்கி நிற்பர் என்று நாம் கனவு கண்டோம். சாந்தனே எழுந்து வா! இந்த வயதினிலே உமக்கு நாமெழுத விதி தந்த வலியிதுவே நீ இல்லையென்று நம்ப மனம் மறுக்கிறது பெற்ற தாயும், உற்ற நற்றுணையாளும் உன்னை நாம் கண்ட குட்டிக் கோலமதில் உன் மகவுகளும்,உடன் பிறந்தோரும் , உறவுகளும், நண்பருமாய் நாமிங்கே தனித்து விடப்பட்டோம் , தவித்து நின்று குமுறுகிறோம். காலத்தின் சதியினிலே கனவாகிப் போனாயே சாந்தன்!! உன் ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கின்றோம் .ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.