“எழுத்தறிவித்தவர் இறைவன்...” எழுத்தறிவித்த இறை, இறையடி சேர்ந்தார்...❤️ “மார்க்ரட் டீச்சர்.. மார்க்ரட் டீச்சர்..” என்று நம் மனதோடும், உணர்வுகளோடும் ஒன்றிப்போன, “திருமதி. மார்க்கிரட் சூசைப்பிள்ளை” என்ற அந்த ஆசிரியப்பெருந்தகை இன்று விழிமூடி, மீளாத்துயிலில்...❤️ வெள்ளை வெளேரென்ற, மெலிதான உருவம், பின்னி விடப்பட்ட நீண்ட கூந்தல்... வெளியார் அறிந்த “மார்க்ரட் டீச்சர்” அடையாளங்கள் இவை❤️ அவர் பொறுப்பில் இருந்த குழந்தைகளை, தன் சொந்தக்குழந்தைகளுக்கும் மேலான அக்கறையும், பரிவும், கண்டிப்பும் கொண்டு ஒழுக்கம் வழுவாமல் வளர்த்து எழுத்தறிவித்தது, அவர் அரவணைப்பில் வாழ்ந்த குழந்தைகள் மட்டுமே அறிந்த அடையாளங்கள்❤️ தனது சொல்லிலும், வழிநடத்தலிலும், எழுத்தறிவித்தலிலும் மாத்திரமில்லாமல், தன் கைகள் தழுவிய குழந்தைகள் அனைவரும் “டிஸிப்ளின்” என்ற ஒழுக்கத்தோடும் வளர அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும், ஒழுக்க போதிப்பின் நீட்சியாக “நற்கருணை வீரன்” என்ற ஒழுக்கநெறி இதழ்களை வாராந்தம் வழங்கி வாசித்து ஒழுக்கத்தின் சீரிய பண்புகளுக்காக ஊக்கமளித்தவர்❤️ அவரின் அந்திமகாலத்தில் ஒரு முறையாவது தொலை பேசும் வாய்ப்பு பெற்றது பெரும் பேறு❤️ 2020 இல் அவரை கனடா சென்று சந்திக்கும் ஆசை நிராசையானது, “கொரோனா” எமதூதர்கள் செய்த இடையூறு❤️ இறுதிவரை அந்த இறையை நேரில் சந்திக்கும் வாய்ப்பை அனைவருக்கும் பொதுவான இறை மறித்தது, அந்த பொதுவான இறைக்கும் அடுக்காதது❤️ நிரந்தரமாக துயில் கொள்ளப்போவதை உணர்வுகள் சொன்னதோ என்னவோ, தள்ளாத நிலையிலும் எனக்கு தொலைபேச முயன்றவர், அழைப்பில் நான் வராததால் “நான் மார்க்ரட் டீச்சர்; நேரம் வரேக்கை எடு ராசா” என்று தனது இறுதி வார்த்தைகளை பதிந்து சென்றார்❤️ நாளை.. நாளை.. என்று பிற்போட்டதன் பலன், இனி எந்நாளும் அந்த இறையின் தளர்ந்த குரலை கேட்கவே முடியாத பாவியாக...❤️ குழந்தைப்பருவத்தில் செய்த எத்தனையோ இடர்ப்பாடுகளை புன்னகையோடு, தாயுள்ளத்தோடு தாங்கி, மன்னித்த “மார்க்ரட் டீச்சர்”, இறுதி வார்த்தைகளுக்கு பதிலளிக்காத இம்மாபாதகத்தையும் மன்னித்தருள வேண்டும் என்பதேயன்றி வேறின்று?❤️ அமைதியில் துயில பிரார்த்தனைகள், டீச்சர்❤️❤️ குகன் யோகராஜா (ஒஸ்லோ, நோர்வே) முன்னாள் மாணவன் யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம் (1973 - 1978)
எமது ஆழ்நத அனுதாபங்கள். மாகிரட் ஆசிரயையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம். ... புஷ்பகாந்தன் குடும்பம்