என் அருமை நண்பா உன் மறைவை என் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இறுதி நாளில் நான் கண்ட ஒளிக்காட்சியை என் மனது நம்ப மறுக்கிறது. சிறுவயது பள்ளிப்பராயத்தில் இருந்தே நண்பர்களாகி பின் ஒற்றாக வெளிநாடு வந்து திருமணம் முடிந்த பின்பும் மனைவி பிள்ளைகளுடன் குடும்ப நண்பர்களாகி, ஒவ்வொருவரது குடும்பநிகழ்வுகளிலும் மாறி மாறி சந்தித்து வாழ்ந்தோம். எனது அம்மாவின் இறுதி நிகழ்வுக்குக்கூட முதலாவது ஆளாக வந்து நின்று சகல உதவிகளும் செய்து இறுதிவிடையளித்துச் சென்றாய்.
பின்பு எனது மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்பசகிதம் வந்து வாழ்த்திச் சென்றாய். அப்படி ஒவ்வொரு குடும்ப நிகழ்வுகளுக்கும் நாம் வேறு வேறு நாடுகளில் இருந்தாலும் சந்தித்து மிகிழ்ந்து வந்தோம். அதோடு எமது உயர்ந்த நட்பின் காரணமாக எமது மனைவிமார், பிள்ளைகளையும் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இணைத்துக்கொண்டோம். அதோடு எமது இளவயது நண்பர்களான தேவபாலன், பரந்தாமன், சத்தியசீலன் ஆகியவர்களின் குடும்பங்களுடனும் நண்பர்களாகவே இருக்கின்றோம். வேறு வேறு நாடுகளில் இருப்பதால் நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் கதைத்து வருவோம். எனது அழைப்பு ஒரு குறிப்பிட்ட நாட்களில் வராவிட்டால், உடனே உனது அழைப்பு எனக்கு வந்துவிடும். உனது அறுபதாவது பிறந்தநாளை உன் குடும்பம் ஆச்சரியப்படும் வகையிலும், நீ எதிர்பாராத விதமாக நடத்திய பொழுது நானும் அதில் வந்து கலந்துகொண்டு மிகவும் ஆனந்தமாக உன்னை ஆச்சரியப்படுத்தி வாழ்த்து தெரிவித்தேன். அதுதான் நான் உன்னை நேரில் சந்திக்கும் இறுதி நாளாக (30.11.2019) இருக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. அன்றைய தினம் இருவரும் சேர்ந்து பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அவைதான் உன் ஞாபகமாக என்னுடன் இருக்கும் பொக்கிஷமாகும். இறுதியாக சித்தரை மாதம் உன்னுடன் தொலைபேசியில் உரையாடியது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அத்தோடு உன்னுடன் சேர்ந்து கழித்த காலங்கள் எல்லாம் என் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பத்மினியும், பிள்ளைகளும் எப்படித்தான் இந்த இழப்பை தாங்கிக்கொள்வார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு தாங்கிக்கொள்ளும் சக்தியைக்கொடுக்க இறைவனை வேண்டி, நண்பனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!