

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீசை வைத்த ஆண் தேவதை
மீசை வைத்த
ஆண் தேவதையொன்றால்,
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாங்கள்
உங்களை மீண்டும்
வயிற்றில் சுமக்க,
உயிரியல் காரணங்கள்
ஒத்துழைக்கவில்லை - ஆதலால்,
நெஞ்சில் சுமக்கிறோம்
எங்கள் சாதனைகளை
உரிமைகொள்ள,
பலர் உள்ளபோதும்,
சோதனைகளை முறியடிக்கும்
சூட்சுமம் சொல்லித்தந்தவர் நீங்கள்!
துன்பங்களை சிரிப்பைக்
கொண்டே துரத்தலாம்!
எனும், புதிய நுட்பத்திற்கான
காப்புரிமை உங்களிடம்
மட்டுமே உள்ளது
எங்கள் பாதங்கள்
பயணிக்கும் பாதைகளின்
முட்களை உங்கள்
பாதங்களால் ஒத்தி
எடுத்தவர் நீங்கள்
உங்கள் மீசை
கறுத்திருந்த காலங்களில்…
ஒரு முறைப்பிற்குள்- உங்கள்
சிரிப்பை சிறைவைத்திருந்தீர்கள்
எங்கள் மீசை
அரும்பிய காலங்களில்…
அவை அதிசய சிரிப்பாய்
அவதாரம் எடுத்தது
உங்கள் கடைசி இருப்பில்
ஞாபகங்கள்
தொலைந்து போனது
ஆனால், நீங்கள்
மறந்து போன“ஞாபகங்களே”
“நாங்கள்” தான் அப்பா!
சேற்றில் இறங்கி– எங்களுக்காய்,
நாற்றுநட்ட, நீங்கள்,
அறுவடையின் போது
மட்டும் அடங்கிப்போனது எப்படி?
உங்களை எதிரில்
பார்த்த, நாட்கள்
தந்த சந்தோஷங்கள் எல்லாம்,
உங்களை எதிர்பார்த்திருக்கும்
இந்த நாட்களின்
வலியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அப்பா !நாங்கள் இன்னும் - பல
இளவரசர்களை காணக்கூடும்!
ஆனால், நீங்கள் தான் எங்களுக்கு
எப்போதும் “அரசன்!”
Rip