அல்லைப்பிட்டியின் அடையாளங்களில் ஒன்றாய் பரிஸ் நகரில் வலம்வந்த அன்ரன் அண்ணாவின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியைத் தந்தது. அவர் இனக் கலவரத்தில் இருந்து தப்பி ஊருக்கு வந்த போதுதான் முதன் முதலில் அவரின் அறிமுகம். தான் தப்பி வந்த கதையை அவர் சொன்னதிலிருந்து எமக்கும் அவருக்குமாய் ஆயிரமாயிரம் கதைகள். கடற்குளிப்பு , கரோலஸ், கிளித்தட்டு, கிட்டி, நாடகம், திருவிழா,திரைப்படம், சூடடி என அவரோடு நான் கழித்த பொழுதுகள் மறவா நினைவுகள் சுமந்தவை. பரிஸ் வந்த பின் அல்லைப்பிட்டியாரின் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் முன்னிற்கும் முதல் ஆள் அவரே! கனிவான பார்வையும் அன்பான புன்சிரிப்புமாய் வரவேற்று, 'நம்மவன்' என்ற ஒட்டுறவை எப்போதும் பேணுவார். "பார்க்கலாம் விடு", "செய்வோம்", "பிரச்சினை இல்லை", "வெல்லலாம்", "நான் பாக்கிறேன்" இவையே அவரிடம் இருந்து எமக்கு கிடைத்த ஆதரவு வார்த்தைகள். அவரின் பிரிவு எம் உறவுகளிடையேயும் நட்பு வட்டத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாய் அவரை நண்பன் ஒருவனின் மரணவீட்டில் சந்தித்தேன். சிறு சிக்கல் ஒன்றுக்கு வகை கேட்டேன். கடைசியாய் அவர் என்னிடம் சொன்னது. "யோசிக்காதையப்பன் நான் பாத்துக் கொள்ளுறன். வெல்லலாம்!"