யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நடராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அப்பா
தேடுகிறோம் உங்களை
காணவில்லை எம் அருகிலே
ஒற்றை நொடியில் ஓராயிரம் அதிர்வுகளை
ஏற்படுத்தியது உங்கள் மரணம்
ஆயிரம் முறை அழைக்கிறோம்
ஆனால் நீங்கள் மெளனித்து விட்டீர்கள்
எங்கே சென்றீர்கள் அப்பா
இப்படி எம்மை பரிதவிக்க விட்டு
புன்னகையும் கனிவும்
கருணையும் நிறைந்த
அந்த முகத்தை
நாம் இனி எப்போது காண்போம்
குழந்தைகளாய் நாம் இருந்த போது
அன்னமூட்டிய உங்களுக்கு
நோயுற்று படுக்கையில் ஒரு குழந்தை போல்
இருக்கையில் நாம் சோறூட்டினோம்
இனி நாம் யாருக்கப்பா சோறூட்டுவது
உணவு ஊட்டிய கைகள் நடுங்குகின்றன அப்பா
நாங்கள் இனி இல்லை என்ற
நிஜம் உணர மனம் மறுக்கிறது
மீண்டு வர இயலாத தொலைவுக்கு சென்று விட்டீர்களே அப்பா
எப்படி அழைத்தாலும் நீங்கள் வரப்போவதே இல்லை என்ற வேதனை
நெஞ்சை அடைக்கிறது ..
மூச்சு முட்டி தவிக்க வைக்கிறது
நினைத்த நேரத்தில் பேச்சு துணைக்கு அருகில் யாருமில்லை என்று
நீங்கள் கவலைப்பட்ட காலம் கடந்து போய்…..
இனி நினைத்தால் கூட பேசுவதற்கு அப்பா இல்லையே எம்மருகில்
என்ற உண்மை உணர்ந்து நாம் அழுது நிற்கிறோம்
மரணம் உங்களுக்கு உலக வாழ்வில் இருந்து
விடுதலை தந்துவிட்டது
எங்களுடனான உங்கள் நினைவுகளின் வாழ்தலை
மரணத்தால் கூட பிரிக்க முடியாது அப்பா
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம் நீங்காமல் உயிர்வாழும்
மண்விட்டு நீங்கள் விண்ணோக்கிச் சென்றாலும்
கண்விட்டு மறையவில்லை நாம் இருந்த கடைசி நொடிகள்
வார்த்தைகள் தடம் புரள்கிறதே அப்பா
நேற்று வரை இருந்த உறவு
இன்று கனவாகிப்போன நிஜம் எண்ணி மனம் ஊமையாய் அழுகிறதே
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்
நெஞ்சோடு உங்கள் நினைவுகள்
நீங்காமல் உயிர் வாழும் அப்பா
உங்கள் குலக்கொடிகள் நாம்
நீங்கள் இன்றி தவிக்கிறோம்
இன்று
அவனியிலே பூக்காதோ மீண்டும் உங்கள் வாழ்வு என்று
காலனின் கட்டளையில் உறங்கிப் போனது உங்கள் சிரித்த முகம்
நம் வீட்டு கோபுரம் சாய்ந்து போய் இன்றோடு 31 நாட்கள் ஆகி விட்டது
தாங்க முடியா துயரத்தில் தவிக்குதப்பா எம் இதயங்கள்
அமைதியாக துயிலும் உங்கள் ஆன்மா இறைபதம் சேரட்டும்
இறைவனை இறைஞ்சுகின்றோம் உங்கள் நித்திய சாந்திக்காய்….
சொர்க்கத்தின் வழி நோக்கி பயணியுங்கள் அப்பா
அதே நிமிர்ந்த நன்னடையுடனும் ...
நேர்கொண்ட பார்வையுடனும்….
மாறாப் புன்னகையுடனும் !
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏
எம் குடும்பத்தின் தலைவனின் மரணச்செய்தி கேட்டு ஓடோடி நேரில் வந்து எம்மோடு இணைந்து எம் துக்கத்தை பகிர்ந்தவர்களுக்கும்
தொலைபேசி, முகநூல், சமூகவலை, மின்னஞ்சல், RIP Book ஆகியவை மூலமாகவும் துயர் பகிர்ந்தவர்களுக்கும் எமது இக்கட்டான சூழலில் சரீர உதவிகள் புரிந்தவர்களுக்கும் மரணச்சடங்கிற்கு சபை நிறைந்து கவலை பகிர்ந்தவர்களுக்கும் எம்மோடு கரம் சேர்த்து தோளோடு தோள் கொடுத்து இறுதி கிரியை வரை துணையாய் நின்ற அணைத்து உறவுகளுக்கும் எம் குடும்பத்தின் சிரம் தாழ்த்தி நன்றிப்பூக்களை தூவி நிற்கின்றோம்.
தில்லை அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்னாரை பிரிந்து வாடும் அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவருக்கும் எமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்