அன்புமிக்க நண்பன் கண்ணனுக்கு. நலம் நலமறிய ஆவல் என்று ஆரம்பிக்க முடியாத ஒரு கடிதத்தில் சந்திக்க வேண்டிய கவலைகளோடு உனது வசந்தகால தோழர்கள் எழுதிக் கொள்வது. பிரிவும் மரணங்களும் எங்கள் மண்ணில் புதியன அல்ல. கணவன், மனைவி, தந்தை, தாய், பாசமிக்க பிள்ளை என நெடித்து நீளும் உறவுகளை அகலமாய் இழந்த ஆயிரமாயிரம் உறவுகள் எம் அருகிலேயே இருப்பதை நாம் அறிவோம். மரணம் என்பது இயற்கையின் தயக்கமற்ற சுயாதீன நியாயத் தீர்ப்பு என்பதை மனித குலம் அறியும். ஆனாலும் உனது அவசர விடைபெறுதலில் மனதை, நெருடுகிற விடயங்களே அதிகமாய் இருப்பதை அறிகிறபோது வேதனை இன்னும் நீள்கிறது. நாம் கடந்த எங்கள் நட்புக் காலத்தில் இனிய நாட்கள் மனதில் விரிகிறது. அந்த நாட்களில் நாட்டின் போரும், உள்ளூரின் புலப்பெயர்வும், வாழ்வின் கசப்பான அனுபவங்களும் எல்லோருக்கும் இருந்ததைப் போலவே எமக்கும் இருந்தன. உன்னோடு நெருங்கி உறவாடிய பல நண்பர்களுக்கும், உனது குடும்பத்தினருக்கும் உதவுகரமாக இருந்தவன் நீயே. உனக்குள் அந்த நாட்களில் ஒரு தேடல் இருந்தது எதையும் சவாலாக எடுக்கும் எண்ணம் இருந்தது. எதற்க்கும் கலங்காத ஒரு துணிச்சல் இருந்தது. சிக்கலிலும் மாறாத சிரிப்பு இருந்தது. உன் சிரிப்பும், உறவுகளும், வியாபார உத்திகளும் உயரத்திற்க்கு உன்னை அழைத்துச் சென்ற காலங்களாக அவை இருந்தன. எல்லா வியாபாரிகளும் உறவுகளை வாடிக்கையாளர்களாக மாற்றிய காலங்களில், வாடிக்கையாளர்களையே உறவுகளாக மாற்ற உன்னால் முடிந்தது. இந்து மதத்தையும், கவிதைகளையும் ஆசைப்பட வாசித்திருக்கின்றாய். அத்துறை சார்ந்தவர்களை ஆசையோடு நேசித்திருக்கிறாய், காலமறிந்து உதவியிருக்கிறாய். இப்படி மிக நீளமாக உன் சரிகள் பற்றி யோசிக்க முடிகிறது. ஆனாலும் விதி உனக்கான ஒரு தலைகீழான குறுகிய கோட்டையே முடிவில் வரைந்து வைத்திருந்தது. மிகக் குறுகிய வாழ்வை மட்டுமே உன்னால் வாழ முடிந்தது.ஆனாலும் உலக வாழ்வின் எல்லா பக்கங்களையும் அனுபவ வாழ்வில் நிறைவு செய்து தான் நீ செல்கின்றாய் என்பதை உன்னை அறிந்தவர்கள் அறிவார்கள். கடைசி நாட்களில் உன்னோடு அருகிருந்த, நீ அருகிருக்க வேண்டிய இணையாளை தனியாக விட்டுச் செல்லும் துயரங்களைச் சொல்லி அழ வார்த்தையில்லை நண்பா💐 போய் வா நண்பா 💐 உன் ஆழ் மனதின் உண்மைத்துவம் மறு உலகிலும் உன்னைக் காக்கும் 🙏 பிரியா மனதுடன் உன் பாச நண்பன் தம்பி தம்பிராஜா