இப்படித்தான் வாழுங்கள் என்று வாழ்வதற்கென வழி சொல்லி திசையிலியாய் மறைந்து போன எங்கள் அம்மம்மா கனகம்மாவின் கடைசிச் சகோதரி நீங்கள் !! சின்னக்கா சின்னக்கா என்று அன்றைக்கு அம்மம்மாவை அழைத்ததுபோல் நம் சொந்தங்களை தேடி ஆகாயம் தொட்டு பூலோகம் வரைக்குமென கதை கதையாய்ச் சொல்லும் உங்கள் காந்தக் குரலும் அடங்கியதோ ? சின்னக்காவை இன்றைக்கு கனவில் கண்டேன் என்று அன்றைக்கொருநாள் பெறாமகளுக்கு பகிர்ந்தீர்களாமே? அடிக்கடி அழைக்காத நானும் என் அம்மம்மாவின் நினைவோடு அழைப்பெடுத்த ஒரு நாளில் சொல்லு சொல்லு என்ன புதினம், இந்த அம்மம்மாவை தேடியழைத்த செய்தி என்ன? என்று கேட்ட வினாவிற்கு என்ன பதில் சொன்னேன் நான்? ஓம் ஓம் அம்மம்மாவின் இரத்தம் அழைப்பெடுக்க நினைத்தேன் இன்றைக்கு வேலையை முன்னரே முடித்துவிட்டேன் இப்படி ஏதேதோ பதில் சொன்னேன், வாய்விட்டு சிரித்தபடி நான் செய்யும் தொழில் தொட்டு நாட்டு நடப்பிலிருந்து பனிபொழியும் பரிஸ்நகரிலும் நீங்கள் அணியும் சேலைக்கதையும் சேர்த்தே சொல்லியபடி நாற்பது நிமிடங்கள் உரையாடி முடிக்கையிலே எள்ளளவும் நினைக்கவில்லை இனி நீங்கள் இல்லையென்று !! எதற்கிந்த அவசரம்? ஓராண்டு கழிவதற்குள் தாயாகி நின்று பால்யத்தில் தேற்றிவிட்ட தமக்கையை காண்பதற்கு ஓடோடிச் சென்றீரோ? உற்றவர்கள் உறவுகள் சுற்றமும் இங்கிருக்க வந்தபணி முடிந்து நாம் திரும்புதலே முறையென்று அந்த நாளின் இறுதியில் விடை கொடுத்து விரைந்தீரோ? நீர் அறிந்து கொண்ட வாழ்வு சொல்லும் சூத்திரங்கள் அறியாதோர் சுற்றிநின்று புழுங்குகிறார் யாவர்க்கும் இது விதியே !! வணங்குகிறோம் பூதவுடலை.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.