திதி:09/06/2022
யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் சிவநிலையத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தலிங்கம் சிவநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி செய்த சதியோ ஐயா உனக்கு
திதி செய்ய வைத்த கோலம்
கதி என்று உன்னை நம்பி வாழ்ந்திருந்த எங்களது
பதியே விட்டுப் பறந்து சென்றீர் பரிதவித்துத் தவிக்கின்றோம்
அழுதழுது பார்த்துவிட்டோம் ஐயா நீ வரவே இல்லை
பொழுதெல்லாம் விடியும்போது பொறுமையுடன் காத்திருந்தோம்
விழிமூடித் தூங்கமலே உன்வரவைப் பார்த்திருந்தோம்
பழி என்ன செய்தோமய்யா உன் பாச முகம் காட்டாததேன்
ஆண்டொன்று முடிந்ததென்று ஐயா நாம் எண்ணவில்லை
கூண்டை விட்டு நீ பறந்தால் கூடி எம்மைக் காப்பவர் யார்
யாண்டும் உந்தன் நினைவினிலே வாடி நிற்கும் எமைத்தேடி
மீண்டும் வர வேண்டும் என்று வேண்டுகின்றேன் இறைவனையே
சந்தோசம் செத்ததையா தர்மவானே உன்பிரிவால்
வெந்துமே வெதும்புகின்றோம் நீ வேண்டுமையா எங்களுக்கு,
சொந்தங்கள் எல்லோருமே சொல்லெணாத் துயருறவே
எந்த இடம் நீயும் சென்றாய் ஏங்கி உன்னைத் தேடுகின்றோம்
சொர்க்கத்தில் இருக்கின்றாயோ எம் துயரினை அறிந்திடாயோ
பக்கத்தில் வந்து எம்மைப் பாசமுடன் அணைத்திடாயோ
தூக்கத்திலும் உன்னைத்தேடி துடிக்கின்ற எங்களது
ஏக்கத்தைத் தணிப்பதற்கு எப்போ நீ வருவாய் ஐயா