Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

பளைப் பிரதேசத்தின் ஒளி விளக்கு ஒன்று அணைந்தது! போர்க்காலத்தின் இடப்பெயர்வுகள் முடிந்து கண்டி-யாழ் பாதை திறக்கப்பட்ட ஆரம்ப நாட்கள் அவை. 2003 இன் தொடக்கம் இயக்கச்சியும் மீளத் துளிர்க்கிறது. பளை மத்திய கல்லூரியில் மிக நீண்ட காலத்தின் பெருமைமிகு ஆசிரியர் திலகமாக நடைபோட்டு இடப்பெயர்வு காலத்தில் 1999 களில் இயக்கச்சி அ.த.க பாடசாலையில் அதிபராக கடமையேற்ற (இப்போது இயக்கச்சி மகா வித்தியாலயம்) திருமதி இராசம்மா இராசரத்தினம் பாடசாலையின் சொந்த இடத்திற்கு 2003 ஆரம்ப காலத்தில் கொட்டில்கள் அமைத்து அதனை நகர்த்துகிறார். அதே ஆண்டு ஐந்தாம் மாதம் எனது முதல் நியமனமும் அங்கே அமைகின்றது. பளையில் சொந்த வீடு இருந்தாலும் அப்போது அங்கு அவர் மீள் குடியமரவில்லை. வடமராட்சியிலிருந்துதான் தினமும் பயணம். அங்கிருந்து பஸ்சில் வந்து முகமாலையில் இறங்கி இராணுவச் சோதனைகளை நிறைவு செய்து இத்தாவிலில் புலிகளின் பயண நடைமுறைகளை பூர்த்தி செய்யவேண்டும். அதன் பின் தமிழீழ போக்குவரத்துக் கழகத்தின் பேரூந்துகளில் ஒன்றைப் பிடித்து இயக்கச்சிக்கு வரவேண்டும். பெரும்பாலான பேரூந்துகள் சிலோவாகத்தான் பயணிக்கும். முல்லைத்தீவு செல்லும் Express ஒன்று மாத்திரம் 7.30 ற்கு புறப்பட்டு 7.45 ற்கு இயக்கச்சியில் இறக்கும். ( அப்போது பாடசாலை ஆரம்ப நேரம் 8.00 மணி) கடமையில் உயர்ந்தும் ஒழுக்கத்தில் சிறந்தும் விளங்குவதற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். பிரச்சினைகள் ஏற்பட்டபோதெல்லாம் மிக நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றினார். மாணவர்களதும் ஆசிரியர்களதும் பாங்கறித்து வழிநடாத்துவதில் திறன் மிக்கவர். அனைவருடனும் இறுதிவரை தொடர்பிலிருந்து சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டதுடன் தன்னாலியன்ற வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டிருந்தார். ஒரு பொறுப்புள்ள அதிபராக மட்டுமன்றி தேசத்தின் மீது பற்றுக்கொண்ட ஒருவராகவும் அவரை பார்க்கின்றேன். மிக குறுகிய காலத்தில் 2006 இல் பாடசாலை மீளவும் இடம்பெயர நேர்ந்த போது “இவளவு தியாகங்களுக்கும், உயிர் உடமை இழப்புகளுக்கும் ஒரு அர்த்தமுள்ள விடியல் எமக்கு கிடைக்க வேண்டும்” என என்னிடம் கூறினார். 2009 இல் எல்லாமும் முடிந்தபின் மிக கவலையோடு என்னுடன் பல உரையாடல்களை மேற்கொண்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி பெறுவதாகுக.

Write Tribute

Tributes