Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 05 NOV 1968
ஆண்டவன் அடியில் 25 SEP 2021
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (வர்ண ராமேஸ்வரன்)
ஈழத்து இசைவாரிதி, சங்கீத மிருதங்க கலாவித்தகர், இசைக்கலைமணி, பல்கலைவித்தகர், நிறுவனர்- வர்ணம் இசைக் கல்லூரி, வர்ணம் கிரியேஷன்
வயது 52
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் 1968 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 113 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உறவுகளின் நீங்கா நினைவுகள் !!!

தாயார்
 மெய்யதன் நரம்பிணைத்து - யாழ் மீட்டிய பரம்பரையின்
 செய்யுளைக் காத்து நின்ற தேவன் - இசைச்
 செல்வமாய் வந்துதித்த ராமன்...
அப்பாவின் பிள்ளையாய் - எங்கள் அருமருந்தாய் தோள் வலியாய்
 எப்போதும் எமை அணைத்த - எந்தன் ஈசனே எங்கு சென்றாய்... !!!

அக்கா - அத்தான்
நேற்றைக்கு எம்மோடு அருகிருந்தாய்
நெஞ்சுக்கு நெருக்கமாய் துணையிருந்தாய்
 போற்றிப் புகழ்ந்திருந்தோம் தம்பியென்று - ஐயா
போய் முடிந்து போனாயோ எமை மறந்து...

மனைவி
விழி தேடுதுன்னை வாசலிலே நித்தம் நித்தம்
வழி தான் மறந்து போனீரோ வலிதான் மிச்சம்...
பொன்னே என் திருவே உனை நேசிக்கின்றேன் - நீ
விண்ணேகிப் போன பின்னே பூசிக்கின்றேன்!
உன் மதுரக் குரலொலியே எந்தன் துணை - நம்
 குஞ்சுகட்காய் வாழுமென்றும் உந்தன் துணை...!!!

பிள்ளைகள்
எங்கு சென்ற போதும் உங்கள் பெயர் இருந்தது - ஏதோ
 இமயத்தின் நிழல் போலசுகம் இருந்தது...
தங்கி நின்ற காலமெல்லாம் அசைவாடுதே - அப்பா
தனித்துப் போய் மனம் உங்கள் இசைக்கு ஏங்குதே... !!!

மருமக்கள்
பட்டி தொட்டி எங்கிலும் உன் பாடல் ஒலிக்கையிலே - நீயோ
 ரொட்டி சுட்டுத் தந்து நின்று கட்டி அணைத்தனையே...
விட்டு விட்டுப் போன செய்தி முட்டி முட்டி மோதுகையில் - மாமா
சுட்டு நெஞ்சு நொந்து நொந்து பட்டுப் பட்டு வேகுதே... !!!

பெறாமக்கள்
இத்தனை சடுதியிலே எமை விட்டு உமை எடுக்கப்
பித்தனோ இறைவன் அவன்... பேசாப் பொருள் மறையோ...
சித்தனோ யாம் அறியோம்... சித்தப்பா நீ எங்கு சென்றாய்... !!!

மாமா, மாமி
பிள்ளைக்கொரு பிள்ளையாய் - நாம் பெற்றெடுக்காத் தெய்வமாய்...
சொல்லுக்கு நூறு தரம் - எம்மை சுகம் கேட்ட செல்வமே...
எத்தனைதான் நினைப்போமோ இன்னும் துயர் சுமப்போமோ...
அத்தனையும் ஆகி நின்ற அற்புதத்தை தொலைத்தோமே... !!!

மைத்துனிமார், சகலர்
 ஏதுவந்த போதும் எங்கள் முன்னம் இருந்தீர் - எந்த
ஏமசாமம் அழைத்தாலும் கண் முன் இருந்தீர்...
தீதுவந்து போனதுவோ ராம் அண்ணா - எம்மைப்
பாதிவழி விட்டு ஏனோ போனீர் அண்ணா ... !!!

மாணவர்கள்
ராக தாள சுருதியோடு வர்ணம் கொடுத்தீர் - எம்மை
நாளும்நாளும் வார்த்தெடுத்து வண்ணம் கொடுத்தீர்
 ஏகம் அனைத்தும் நீயே - எம்மை ஏற்றி வைத்த அழகும் நீயே
யாகம் செய்யும் வரம்கிடைத்தால் - என்றும் எமக்கு நீயே குரு நாதன்...!!!

சக கலைஞர்கள்
விழிக்கும் வழியெங்கும் வீணையாகி நீ இசைத்தாய் - தமிழ்
 மொழிக்குத் துணையாகி மேள தாள விரல் மடித்தாய்...
கணக்கில் அடங்கிடாத கான ராகக் குரல் வடித்தாய் - எங்கள்
மனத்தில் வலிப்பதற்கோ மௌனமாக நீ மறைந்தாய்...

தேசத்து மக்கள்
பிந்தி வரும் சந்ததிக்கும் பாடல் பாடினாய் - தங்கள்
பிறப்பறுத்துப் போனவர்க்கும் சந்தம் பாடினாய்...
மோதலுக்குள் அலைகையிலும் ராகம் படித்தாய் - ஈழம்
உருக்குலைந்து போகையிலே உள்ளம் வெடித்தாய்..!!

எமது இக்கட்டான சூழ்நிலையில் எமக்குப் பலவிதத்திலும் ஆறுதலாக நின்ற உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், இசை ஆர்வலர்கள், ஊடகங்கள், தாயகம், கனடா, உட்பட பல நாடுகளிலிருந்தும் பட்டங்கள் வழங்கி மரியாதை செலுத்திய தமிழ் உணர்வாளர்கள் யாவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அன்னாரின் அன்பு அம்மா, மனைவி, பிள்ளைகள், அக்கா-அத்தார், மற்றும் குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Sep, 2021
நன்றி நவிலல் Mon, 25 Oct, 2021