நெஞ்சு இறுகி நிற்கின்றேன் -ஆசை மச்சான் நீ இறந்த செய்தியினை ஏற்க முடியவில்லை என்னால் ... உன் பயணம் எனையும் மரணிக்க வைக்கிறது.... நேற்று வரை என்னோடு நெஞ்சிணைந்து நின்றவனே காற்று அடித்து கலைந்தது போல் கன தூரம் ஏன் போனாய்... அப்பு அப்பு என்று எனை அன்பால் அழைத்ததுவும் ஆசை மச்சான் என்று அள்ளி நீ அணைத்ததுவும்... துள்ளித் திரிந்த எனை பக்குவமாய் பள்ளிக்கு அனுப்பியதுவும் தட்டிக் கொடுத்து எனை தலைமகனாய் ஆக்கியதுவும் தகப்பனாய் எனக்கிருந்து தத்துவம் கூறியதுவும்... நித்தமும் என் நினைவில் நின்று நின்று கொல்கிறதே... முற்றும் நீ அகன்ற செய்தி மூச்சடைக்கவைக்கிறதே... சத்தியம் தவறாமல் வாழ்ந்த பெரும் வரலாறே .. சத்தமற்று நீ மறைந்து நீண்ட தூரம் சென்றதேனோ... உனையே சுற்றி நின்றேன் உரிமையாய் உடனுறைந்திருந்தேன் அன்னையின் அணைப்பதனை - அருகிருந்து பெற்றிருந்தேன்... ஒரு வீட்டில் ஒன்றாகி உயிரோடு உறவாகி ஆசை மச்சான் எனும் அன்போடு கருவாகி கனிவோடு வாழ்ந்தோமே-அக் கச்சேரி வீடு தனில் ஒரு மரத்தின் கிளைகள் போல் ஒன்றாக நாம் வளர்ந்து அடி மரத்தின் வேர் அறுந்து-இப்போ அனாதரவாய் நிற்கின்றேன் நித்தமும் உன் நினைப்பில் நெஞ்சு கனக்கிறது நீ அற்ற நிமிடங்கள்- என் நினைவைத் தடுக்கிறது யாரை நான் நோகுவது யார்கெடுத்துச் சொல்லுவது ஆர்ப்பரித்து அழுதாலும் அருகில் நீ வருவாயோ-மீண்டும் ஆசைமச்சான் என அழைப்பேனோ... கண்கள் பனிக்கிறது கணங்கள் தொலைகிறது என்றும் உன் முகம் காண இதயம் துடிக்கிறது... சென்று வா என் ஆசை மச்சான் சேர்ந்து மீண்டும் பிறந்திடுவோம் ஒரு மரத்தின் கிளைதனிலே கிளிகள் போல் ஒன்றாய்ப் பறந்திடுவோம்... அன்பு மச்சான்- உன் ஆத்மா சாந்தி வேண்டி ஈசனை நாடுகின்றேன் மனம் குமுறி .. ஓம் சாந்தி ...ஓம் சாந்தி ..... ஓம் சாந்தி . உன் பிரிவின் வலி சுமந்து உரிமையுடன் உன் ஆசை மச்சான் சுகந்தன் புருசோத்மன்..!!!