

சித்தப்பா.......! எம் புலம்பெயர் வாழ்வின் தொடக்கப் புள்ளியே! அப்பாக்கு நிகராக பல கடமை ஆற்றினீரே! "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"எனும் கூற்றுக்கு இலக்கணமாகி; தான் கண்ட துன்பம் எமை அணுகா வண்ணம் காக்க அறிவுரை சொன்ன தன்னார்வ தொண்டனே! வாழ்விலும் சாவிலும் வள்ளலென வாழ்ந்து சென்றுள்ளீர் சித்தப்பா! கிரிகெட் தொடர்கள் விறுவிறுப்பாய் போகும் போது சகபாடியாய் ஆகி நீங்கள் சண்டையிட்டு கதைத்து சிரித்த காலங்கள், உங்கள் கையாலே பூரி செய்து வயிறாற பரிமாறிய பொழுதுகள், ஊரிலுள்ளோர் உடல் நலங்கள் வினவிடும் காலங்கள் இனி வாராதோ சித்தப்பா!? இவ்வளவு விரைவில் எமை நீங்கி செல்வீரென்று எள்ளளவும் எண்ணாது சுகநலம் தேறவிட்டே கனகதை சொல்லியாற காத்திருந்த எனக்கு, கால் தொட்டு வணங்கவும் காலம் விட்டுக் கொடுக்கவில்லை! நம் நாட்டுப்பயணத்தில் நாட்கள் கரைந்தோட துர்அதிஷ்ட வசமாக தூரத்தில் நின்று விட சந்தர்ப்பம் ஒன்றமைத்து சந்திக்க கிடைக்காமல் தடுக்கப்பட்டு விட, காதோரம் வந்த செய்தி கனவாக்கி விட்டதுவே! - நீங்கள் காணக் கிடைக்காத கடவுளாகி விட்டுவிட; பார்க்க கிடைக்காத பாவியாகி விட்டேனே! அத்தனையும் இப்போ ஆறாத வடுவாகி; நின்று கொல்லும் சுமையாய் சுமக்கின்றேன் சித்தப்பா! நிறைவான வாழ்வு வாழ்ந்து பலபேரை வாழ வைத்து மடிந்த பின்னும் ஓர் மகத்தான தியாகத்தை மருத்துவ அறிவியலுக்கு ஆவலாய் ஆற்றிவிட்டு மனிதருள் மாணிக்கமாகி, மங்காமல் மறைந்துள்ளீர் சித்தப்பா! நித்திலத்தில் நின்நினைவு நீண்டு நிலைத்திருக்கும் நிம்மதியாய்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!