மட்டக்களப்பு சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணநாயகி கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சீர்போற்றும் சித்தாண்டிப் பதியின் சிகண்டிமுனி
ஊர்போற்றும் ஆலயத்தை அமைக்கப் பணிபூட்டு
ஏர்பூட்ட எம்மிறையை இறஞ்சி நின்ற பெருமாட்டி
சீர்பெற்ற பெருவாழ்வு நீத்து ஓராண்டு ஆனதுவோ?
நெஞ்சத்து நினைவுத் துயர் ஆறவில்லை அம்மா
விஞ்சியே எமைவிட்டுத்துச் சென்று ஓராண்டு ஆனதுவோ
அஞ்சாது வாழ்ந்திடவே வழிகாட்டியாய் இருந்தாய்
மிஞ்சியே துன்பம் தொண்டையை அடைக்கு தம்மா!
சிரித்திருந்து வரவேற்று அன்புமொழி பேசிய
உரித்தான நாட்களை எண்ணித் தவிக்கின்றோம்
பரிவுளம் கொண்டெம்மை பக்குவமாய் வளர்த்த
கரிசனையின் திருவுருவே எங்கள் தெய்வத்தாயே!
உள்ளத்து நினைவலைகள் உள்ளிருந்து பேசுதம்மா
உள்ளம் கொள்ளைகொண்ட உறவுப் பாலமே எங்களம்மா
கள்ளம் கபடமற்ற கற்பகவல்லியாய் எமக்கிருந்த தாயே
வெள்ளை அகமெல்லாம் வனத்தில் காட்டிய எம்தாயே!
ஆண்டொன்று ஆனதுவும் தெரியாது உன் நினைவில்
பூண்டதொரு மனமாக எம்மம்மா எம்முடனனே தினம்
கொண்ட உறவாக உரையாடி மகிழ்ந்திருந்தோம்
மீண்டும் சொர்க்கத்தில் இருந்திங்கு வாருங்கள்!
ஆறுதில்லை எம்மனது எமதருமை தாயாரின்
மாறுதில்லை நினைவுகளோ எமக்களித்த பாலமுதம்
ஊறில்லா இன்சுவைப் பண்டங்கள் செய்தளித்த
மாறில்லா மாணிக்கமே உனை மறந்திடவும் கூடுமோ!
பார்புகழும் அன்னையென நவமான சகோதரரை
ஊர்போற்ற வளர்த்தெடுத்து ஆதரவுக் கரம்தந்த
சார்பான சாதனைகள் சாதித்து அவர் வாழ்வை
சீரோடு சிறக்க வைத்த தியாகச் சுடர்நீயே!
உள்ளம் கவர்ந்திருந்த உத்தமியே எம் தாயே
உன்போல் வதனச்சிரிப் பாலே சிறைபிடித்து
என்றென்றும் இன்பம் ஊட்டி இருப்பதற்கு யாருளர்
என்செய்வோம் எம்தாயே விதிவழியும் அதுவாச்சோ?
ஊர்விட்டு அகன்றாலும் உன்பிள்ளைகள் என
ஊரவர் அன்பு சொரிவதற்கு நீதந்த வரமம்மா
உடமைகள் இழந்தாலும் ஊர்போற்ற வைத்து
பார்போற்ற் எமையாக்கிய பதிவிரதை நீயம்மா
கனிவாகக் கதைசொல்லி கருத்தூன்றிக் கேட்டிடவே
இனிப்பாக வாய்ந்த எம்தாயே தெய்வப் பிறவியம்மா
தனியுறவாய் தாயாகி தண்மதியாய் வதனம் ஒளிவீச
மனிதம் உணர்வித்தாய் எப்பிறப்பில் காண்போமோ?
அன்னையின் பிரிவாற்றாது நினைந்து மனம் உருகும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்.