திதி: 23-03-2023
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவி...!
மங்கையாய் வாழ்ந்த என்னை,
மனைவியென்றாக்கி வைத்து,
பொங்கிடுமின்பம் தந்து,
புவிதனில்தாய்மை தந்து,
தங்கிடும் செல்வம் மூன்றைத்
தந்து நீர் சென்றதெங்கே?
என்ன இந்த வாழ்க்கையென்றே,
எண்ணந்தான் வருகுதிங்கே,
எல்லாமே பொய்தானென்றே,
இப்போதான் புரிந்ததிங்கே.
மற்றவர்க்கு நல்ல மனிதன் நீ,
எனக்கோ என் உயிருள் உயிரன்றோ.
இறைவன் உனை அங்கேனழைத்தான்?
பண்புடையாளன் தன் பக்கத்தில் வேண்டுமென்றோ?
இல்லை மண்ணில் பலகாலம் வாழவிடக் கூடாதென்றோ?
என்செய்வேன் நான்? இது என் காலமிட்ட கட்டளையோ?
எந்த வார்த்தைகளும் எனை இங்கு ஆறுதல் படுத்தாதே.
இனி காண முடியாதா என்றே, இங்கிருந்து ஏங்கி அழுகின்றேன்.
பிள்ளைகள்....!
தந்தை மகற்காற்றும் உதவி யாதும் செய்தே
தனியன்பு காட்டியெம்மை வளர்த்தெடுத்தீர்,
சிந்தைதனில் நல்லொழுக்கம் சமநீதி வைத்தே,
சிறந்தவராய் நட்புடனே பழக வைத்தீர்,
முந்தைவினை போக்கும் நல்விரதம் பூண்டே,
முழுநேர உழைப்பாலே உயர்ந்து நின்றீர்,
வெந்ததுவோ நின்னுடல் கொடுந் தீயினிலே,
வேதனையை மறப்போமோ, தேறுவோமோ,
அப்பா என்றே வாய் நிறைத்து,
அழைத்திட இங்கு யாருமில்லை,
கண்முன்னே வாழ்ந்த காலங்கள்,
இனிக் கனவென்றே போனாலும்,
எங்களுடன் உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீ தான்
எங்கள் இதயங்களின் வலியையும்
இழப்பின் வேதனைகளையும்
சொல்ல முடியாது வார்த்தைகளில்
ஒரு நொடிப்பொழுதும் உனை
மறவாமல் நாம் வாழ்கின்றோம்
ஓயாது உன் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்..