எங்கள் பரம்பரை என்ற பூங்காவனத்தின் இன்னொரு ஆலமரம் நோய், கடவுள், விதி, ஆயுள் என்ற உருவமறியாத ஏவுவினைகளால் சாய்க்கப்பட்டுவிட்டது. கடைசியாகத் தன்னும் முகத்தை பார்க்க முடியாத பாவப்பட்ட பிறவிகளாக நாங்கள் புலம்புகிறோம். ஆனால் எங்கள் ஒவ்வொருவரின் வாழ்கையிலும் நீங்கள் ஓடி ஓடி இணைந்து , அணைத்து வழி நடத்தி மெருகேற்றிவிட்ட பாதைகளில் தான் நாங்கள் இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். புலம் பெயராமல் யாழ்ப்பாணத்திலேயே இருந்திருந்தால் இன்று உங்கள் இறுதிப் பயணத்தில் வீடும் தெருவும் நிறைந்திருக்கும். உரிமையுள்ள அத்தனை பேரும் உங்களை சுற்றியெல்லோ நின்றிருப்போம்..? அத்தனை பேரப்பிள்ளைகளும் பூட்டப் பிள்ளைகளும் பந்தம் ஏந்தி ஒளிமயமாக அல்லவா உங்கள் யாத்திரை தொடங்கியிருக்கும்...?? ஒவ்வொருவரையும் இழந்து, உரிமைக்கும், மன ஆறுதலுக்கும் கூட இடமில்லாமல் ....புலம் பெயர்ந்து ....என்ன சாதித்துவிட்டோம் என்று தெரியவில்லை பெரியம்மா..!! ஒருவரின் மரணம் என்ற நிரந்தர பிரிவு அல்லது நிரந்தரமாக விலகிப் போதல் என்ற நிகழ்வு நம் மனதில் அவர் பற்றிய நினைவுகளையும் கூடவே எடுத்துப் போனால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றுகிறது கடந்த 25ம் திகதிக்கு பின்னான ..உங்களை நினைவுபடுத்தும் ஒவ்வொரு கணங்களும்..!! மரணம் இழப்பு எல்லாம் எழுதிவைக்கப்பட்ட ஒன்று தான் என்பது அறிவுக்கு மட்டும் தான். மனதுக்கும் நினைவுகளுக்குமல்ல. இனி நீங்கள் எங்களோடு இல்லை என்பதை ஏற்கவும் முடியவில்லை.அதே போல் உங்கள் நினைவுகளை எந்தவொரு சக்தியாலும் எங்களை விட்டு அழிக்கவும் முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று இப்போது கடவுளை வெறுத்த நானே இப்போது அவனிடம் கையேந்தி பிராத்திக்கிறேன்.காரணம் உங்கள் ஆத்மா அக்காவையும், பேரப்பிள்ளைகளையும் , உங்கள் சகோதரங்களையும் விட்டுப் போக மனமில்லாமல் எங்களை சுற்றிக் கொண்டு தான் நிற்கும் என்று நம்புகின்றேன். பெரியம்மா ! அங்கே சொர்க்கத்தில் பெரியப்பாவும், அம்மம்மாவும், அண்ணாவும் , நீங்கள் பார்த்து உங்கள் சகோதரிக்கும் சகோதரர்களுக்கும் தேடிப் சேர்த்த அத்தனை வாழ்கைத் துணைகளும் உங்கள் வரவுக்காக வான வெளியில் மேகங்களின் அலங்காரங்களுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். போய் வாருங்கள் பெரியம்மா..! பிறப்பற்ற நித்திய வாழ்வில் உங்கள் ஆத்மா இரண்டற கலக்கட்டும். நீங்கள் வணங்கிய இறைவன் நித்திய வாழ்வை தருவார்!! ஓம் சாந்தி!