கண்ணீர் அஞ்சலி பிரபாகரன் குருநாதர் நீண்ட நெடுங்காலமாக எனது பிரியத்திற்குரிய நண்பனாக எனது உள்ளத்தில் குடியிருந்த அருமை நண்பா எங்களையெல்லாம் விட்டுச்செல்லும் நேரத்துக்கு காத்திருந்து, காத்திருந்து இறுதியில் இறைவனிடமே சென்றுவிட்டாயா..? எங்களுக்கிடையிலான நட்பு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்டதே ! அதனால் உனது இழப்பு அறிந்து உள்ளம் கலங்குகிறது. காலம் செய்தகோலம் திசை மாறிய பறவைகள் போன்று தேசங்கள் கடந்து சிறகடித்துப்பறந்தோம். இடையில் எங்கள் நண்பர்கள் முரளியும் ஜனாவும் எம்மைவிட்டு, விடைபெற்று மீளாத்துயில் கொண்டபின்னரும், எமது நட்புறவு துயில் கொள்ளாமல் உயிர்ப்புடன் திகழ்ந்தது. நாம் எங்குசென்று தஞ்சமடைந்தாலும், எமது உறவு என்றென்றும் நிலைத்து நின்றது. இறுதியாக சுமார் பதினைந்து மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் உன்னை சந்தித்தேன். பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கொவிட் 19 தொற்று உலகெங்கும் பரந்து விரிந்துசென்றபோது, 2020 ஆம் ஆண்டில் அந்தத் தொற்றுக்குள்ளே வாழ்ந்து, எம்மை பழக்கப்படுத்திக்கொண்டு மலர்ந்துள்ள 2021 ஆம் ஆண்டிலாவது நாம் மீண்டும் சந்திக்கலாம் என காத்திருந்தோம். எமக்கு பொறுமை இருந்தது ! ஆனால், விதிக்கு பொறுமையில்லை. மனிதர்களின் ஆயுளுடன் கோரமாக விளையாடிவிடும். விதியின் அந்த விளையாட்டில் நீயும் விண்ணோக்கிச்சென்றுவிட்டாலும், எமது உள்ளத்தில் விதையாகிவிட்டாய் ! எனதுயிர் நண்பா…! பலரையும் உனது இதயத்துள் வைத்து போற்றினாய். உன் இதயம் அதனால் கனத்துவிட்டதா. இதயம் இல்லாத இயமன் உன்னை எம்மிடமிருந்து பிரித்து, காவுகொண்டுவிட்டானா..? பிறப்பும் – இறப்பும் இயற்கையின் நியதிதான். நீ வாழ்ந்திருக்கவேண்டியவன். “ ஜனனமும் பூமியில் புதியது இல்லை, மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? “ என்று கடல்சூழ்ந்த கண்டத்திலிருந்து என்னை அழவைத்துவிட்டு போய்விட்டாயா..? எனது ஆரூயிர் நண்பா, உனது ஆத்மா சாந்தியடையட்டும். உனது இழப்பின் துயரத்தில் வாடியிருக்கும் உனக்குள் வாழும் உனது குடும்ப உறவுகளின் வேதனையில் நானும் கலந்துகொள்கின்றேன். உனது நண்பன் செல்வகுமார் – அவுஸ்திரேலியா
Dear Mr Gurunathan Prapharan (Prapa), You have surprised all of us. The immediate family, your loving customers, your dedicated loving friends of very many years. It is very sad and unbearable....