Clicky

தோற்றம் 19 JUN 1944
மறைவு 07 MAR 2022
அமரர் வரலட்சுமி பத்மநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மற்றும் குரும்பசிட்டி பொன் பரமானந்தா வித்தியாலயம்
வயது 77
அமரர் வரலட்சுமி பத்மநாதன் 1944 - 2022 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Luckman Sathiamoorthy 15 MAR 2022 Canada

யா/ தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் நீண்டகால வரலாற்றுப்பாட ஆசிரியை திருமதி வரலட்சுமி பத்மநாதன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகிறோம். இவர் எமது காலத்தில் கல்லூரியின் மூத்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். பலருக்கும் கசப்பான வரலாற்று பாடத்தை மிகவும் அக்கறையுடனும் அன்பு கலந்த கண்டிப்புடனும் எமக்கு கற்றுத்தந்திருந்தார். கல்லூரி நாட்களில் இவரது பாட குறிப்புகள் எழுதும்போது பலருக்கு கை வலித்திருக்கலாம் ஆனால் வரலாற்று பாடத்தை மிக நேர்த்தியாக வகைப்படுத்தி குறிப்புகள் தருவதில் இவருக்கு நிகர் இவரே. பாடத்தை மட்டுமல்லாது நல்ஒழுக்கத்தையும் கற்றுற்தந்தவர்களில் ஒருவராக இவர் இருந்தார். ஆரம்பகாலங்களில் பாட குறிப்புகள் மற்றும் கணிப்பீடுகளின் பின் பலரது கொப்பிகள் பறப்பது ஞாபகம் வருகிறது. ஆரம்பத்தில் இவரது பாடவேளை பலருக்கு மிகவும் அமைதியாக பயங்கலந்த சோதனையாக அமைந்தது, ஆனால் க.பொ.த சாதாரண தர வகுப்புகளின் இறுதிக்காலத்தில் அனைத்து வகுப்பு மாணவ நண்பர்களுமே அக்கறையுடன் வரலாற்று வகுப்பில் படித்தமைக்கு இவரது கண்டிப்புடன் கலந்த அக்கறையே காரணம். எமது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவர்களில் முதன்மையானவர்கள் ஆசிரியர்கள். எமது கல்லூரிக் காலத்தில் எம்மை செதுக்கியவர்களில் திருமதி பத்மநாதன் ஆசியையும் ஒருவர். 2017 ம் ஆண்டு எனது திருமணத்திற்காக மீண்டும் தாயகம் திரும்பிய போது உங்களை தெய்வாதீனமாக தெகிவளை ஆஞ்சநேயர் ஆலயத்தில் சந்தித்து உங்கள் ஆசி பெற்றமை எனது பாக்கியமே. உங்கள் உன்னதமான சேவையை யூனியன் கல்லூரி சமூகம் என்றும் மறக்க முடியாது. கற்பித்தல் பணி மட்டுமல்லாது பரிசளிப்புவிழா, விளையாட்டுப் போட்டி மற்றும் ஏனைய விழாக்களில் ஒழுங்கமைப்பு வேலைகளை திறம்பட கவனித்து அதிபருக்கும் ஏனைய ஆசிரிய குழாத்துக்கும் உறுதுணையாக இருந்தவர். உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! அன்பு மாணவன், ச. லக்மன்