ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் ராகவி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மருணித்து வாழ்கின்றாள்!
உதயனுக்கும் ராகினிக்கும் ராகவியாய்ப் பிறந்தாள்
உடன்பிறப்பு வைஸ்ணவிக்கு உற்றதுணை யானாள்!
உயிரெனவே பெற்றோரை உளம்நிறுத்தி வாழ்ந்தாள்
உயர்கல்வி கற்கையிலே உயிர்விட்டு வீழ்ந்தாள்!
கலைகளிலே ஓவியத்தைக் காதலித்து வந்தாள்
காவியமாய்ப் பலவண்ண ஓவியங்கள்
தந்தாள்!
கவியெழுதும் ஆற்றலையும் கனதியாகக் கொண்டாள்
காலையொளிச் சூரியனாய்க் கதிர்பரப்பி நின்றாள்!
இசையினிலே இதயமதை ஈடுகொள்ள வைத்தாள்
இசைக்கருவி வயலினையும் வாசித்து மகிழ்ந்தாள்!
ஈடுபாடு கொண்டுபல கைவினைகள்
செய்தாள்
ஈடில்லா நினைவுகளைத் தந்துவிட்டுச் சென்றாள்!
அமைதிக்கு இலக்கணமாய் வார்த்தைகளை உதிர்ப்பாள்
அழகான இதழ்களினால் எழிலோடு
சிரிப்பாள்!
ஆர்வமது மேலிடவே அனைத்தையுமே முடிப்பாள்
அடுத்தடுத்து முயற்சிசெய்து முதன்மைநிலை
காண்பாள்!
உறவினர்கள் அன்புதனை உரிமையோடு ஏற்பாள்|
உற்றநண்பி என்றுவந்தால் உயர்நட்புக் கொடுப்பாள்!
கற்றவிடம் முழுவதிலும் சாதனைகள் புரிந்தாள்
களிப்புடனே பெற்றோரின் கடமைகளை முடித்தாள்!
இத்தனையும் சுத்தமதாய் அர்த்தமுடன் செய்தாள்
ஈவிரக்கமின்றிக் காலன் அழைத்துவிடச் சென்றாள்!
இதுமரணம் இல்லையென்று இருப்புக்களைத் தந்தாள்
எங்களுக்குள் எப்போதும் இருந்துகொண்டே
யிருப்பாள்!