

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு செட்டியதெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனவு போல் இருக்கிறது - இன்னும்
கனவு போல் தான் இருக்கிறது
காலன் உங்களைப் பறித்துச் சென்று
காலச் சக்கரத்தின் சழற்சியில்
கடந்தோடிக் கழிந்து விட்டது ஓராண்டு!
ஆனாலும் தந்தையே!
உங்களின்
உருவ அசைவுகளும்
இனிய நினைவுகளும் எங்களின்
கண்களை நனைத்துக் கொண்டும்
மனதை வாட்டிக் கொண்டும்
வீட்டைச் சுற்றிக் கொண்டும்
எமது கரங்களைப் பற்றிக் கொண்டும்
எம்மோடு கூடவே பயணித்து வருகின்றன.
உங்களின் மறைவுக்குப் பிறகு.....
எப்போது மருத்துவமனை சென்றாலும்
உங்களின் உயிர் பிரிந்த தருணத்தில்
சோகம் சொட்டச் சொட்ட நாமனைவரும்
உங்களைச் சுற்றியிருந்த நிகழ்வு தான்
நினைவுக்கு வருகிறது.
எப்போது மயானம் சென்றாலும்
உங்களை எரித்த ஞாபகந்தான்
ஆழ்மனதை வதைக்கிறது.
எப்போது கடற்கரை பார்த்தாலும்
உங்களின் அஸ்த்தி கரைத்த ஞாபகந்தான்
அடிநெஞ்சை நெருடுகிறது.
உங்களின் குணாம்சங்களையும்
செயற் திறன்களையும் கோர்த்து நெய்யப்பட்ட
இக்கவிதை உங்களுக்குச் சமர்ப்பணம்!
நல்ல உயரமும், கம்பீர உருவமும்
நாலுபேர் வியக்கும் எடுப்பான தோற்றமும்
உள்ளம் உருகும் உற்சாகப் பேச்சும்
கள்ளமில்லா உண்மை அன்பும்
மற்றவர் மதிக்கும் பண்பான மனிதரும்
மறையாமல் நிலைக்கும் நின் நற் செயல்களும்
நம்பிக்கை ஊன்றி நிமிர்ந்த நன் நடையும்
தும்பிக்கையானை துதித்த உன் மனமும்
தெள்ளத் தெளிந்த நல்ல சிந்தனையும்
தேவாரம் பாடும் இனிய குரல் வளமும்
ஆழுமை நிறைந்த நின் தலைமைப் பொறுப்பும்
தோழமை நிறைந்த நின் பரந்த மனதும்
தமிழ்,சிங்களம்,ஆங்கிலமென மும்மொழிப்
புலமையும்
தாய்த் தமிழ் இலக்கியத்தில் தீராத காதலும்
ஊருக்கு உதவிய உன் கருணை உள்ளமும்
உறவுக்காய்த் துடிக்கும் உன் இரக்க குணமும்
நெஞ்சுக்கு நேர் சொல்லும் சத்திய வாக்கும்
அஞ்சா நெஞ்சனாய் ஆணுக்கான துணிவும்
சபையை உன் வசமாக்கும் சாமத்தியத் தனமும்
அவையை மதிக்கும் உன் பெருந் தன்மையும்
ஊருக்காய் உழைத்த உன் சமூக சேவையும்
ஆருக்கும் அடிபணியா உன் திறமைத் திமிரும்
மன்றத்தை வழி நடத்திய நின் தனித் தன்மையும்
மக்களை ஒன்று கூட்டிய உன் மனித நேயமும்
இவையெல்லாம் இணைந்தே நின் பெயர் வாழும்!
இவ்வையக மெங்கும் உன் புகழ் சூழும்!
இப் பூவுலகில்
நாம் வாழும் காலம் வரை.....
நம் சந்ததி நீளும் காலம் வரை.....
உங்களின் முகம் எங்களுக்குள்
ஊசலாடிக் கொண்டேயிருக்கும்
உங்களின் ஞாபகச் சாரல் எமது மனவெளிகளை
நனைத்துக் கொண்டேயிருக்கும்
உங்களின் சிரிப்பொலியும், பேச்சொலியும்
எங்களின் காது மடல்களில்
எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.
உங்களை இழந்த ஓராண்டுப் பிரிவுத் துயரோடு
உங்களின் ஆத்ம சாந்திக்காய்ப் பிரார்த்திக்கும்
உங்கள் அன்புக் குடும்பத்தினர்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Rest in peace mama!!. I really convey my condolense