யாழ் உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சிவகாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா எனும் அதிசயம்
அவள் எம்மில் ஐக்கியம்
எத்தனை உறவுகள் வந்தாலும்
நிரப்ப முடியா வெற்றிடம்
கருவறையில் உருவான சொந்தம்
கண்ணைவிட்டு மறைந்தாலும்
எம் எண்ணங்கள் என்றும் உன்னுடன்
மூப்பு, பிணி, சாவு தெரிந்த உண்மை
மூளைக்குத் தெரிந்தாலும்
இதயம் ஒப்பவில்லை
உன்னுடைய கடமைகளை
உன்னதமாய் முடித்து விட்டாய் அம்மா
மீளாத்துயிலில் நீ
ஆறாத்துயரில் நாம்
இது கடந்து போகும் வலியல்ல
காலமும் தொடரப் போகும் ரணம்
எங்களைச் செதுக்கி
வாழ்க்கை கற்றுத் தந்தாய் அம்மா
செயலிலும் சிந்தையிலும்
உன் தாக்கம்
நீ இப்போது மெய்யான பொய்யானாய்
ஆனால் எம்மை வழி நடத்த
மெய்யாய் வருவாய் பொய்யல்ல
பொட்டு வைத்த வட்ட முகம்
நீண்ட நெடுங்கூந்தல்
கூர்மையான நேர்மையான பார்வை
அதீத அறிவுப்பசி
பிள்ளைகளை உயர்வாக்கி
பெருமிதம் கொண்டாய்
சதுரங்கம் உனக்கு கைவந்த கலை
சம்பியன் உன் வெற்றிகள் கண்டு வியந்தோம்
காதல் என்றால் என்னவென்று
கற்றுத் தந்தாய்
கட்டிய நாள் முதல் கடைசிவரை
அற்புத ஜோடியாய் வலம் வந்தாய்
அப்பாவை ஆற்றுவது
தெரியாமல் திகைக்கின்றோம்
பாட்டுக்கேட்கப் பிடிக்கும்
கேட்டுக்கொண்டே தூங்கப் பிடிக்கும்
பாடவும் பிடிக்கும் உனக்கு
உன்னைப் பாடச் சொல்லி ரசிக்க
எமக்குப் பிடிக்கும்
போர்ககாலச்சூழலில் இன்னல்கள்
பலதாண்டி
போராடி ஜெயித்தாய் அம்மா
தடைகள் பல கடந்து எம்மையும்
தட்டிக் கொடுத்து
தவம் பல செய்து
தரணியில் வெற்றி கண்டாய் அம்மா
பலதேசம் சென்று வந்தாய்
பார் புகழ வாழ்ந்து வந்தாய்
இன்னல்படுவோர்க்கும் இல்லாதோருக்கும்
இல்லை எனாமல் இரங்கினாய்
பறைசாற்றாமல் தர்மங்கள் செய்தாய்
நிரந்தர நித்திரைக்குள் நீ
என்றும் நீ காட்டிய வழியில் நாம்
மறதிதான் மாமருந்தென்றாய்
தேடுகின்றோம் அந்த மாமருந்தை.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின அந்தியேட்டி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களின் அன்பூர், உரும்பிராயில் அமைந்துள்ள கற்பக விநாயகர் இராஜேஸ்வரி மண்டபத்தில் மு.ப 11:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் கலந்து வாழ்வின் பூரணத்தினை கொண்டாடி மதிய போசன விருந்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Our heartfelt sympathies to her husband and to her children & grandchildren. We used to visit her being my mum’s first cousin regularly when we were go to Jaffna.