யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Purley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா நீ
அழகான
ஓவியமானாய்
எம் நினைவினில்
என்றும் அழியாத
ஒரு பெருங் காவியமானாய்.
உயிர் தந்தாய்
ஊனை உருக்கி
உடல் தந்தாய்
உள்ளம் உயர
நல்ல எண்ணம் தந்தாய்.
நற்பதவி தரு
உயர் கல்வியும் தந்தாய்.
ஆனால்
ஏனோ எம்மிடம் மட்டும்
ஏதும் வாங்கமலே
எமை நீ பிரிந்தாய்!
வாழும் போதினிலே பிறருக்கு
வாரிக் கொடுத்தாய் - நீ
ஈகை பெரிது
இங்கு என்பாய்!
இல்லாதோர்க்கு கேளாமலே
அள்ளிக்கொடு என்னும்
அன்பு மொழியல்லால்
பூசலுறு வேறு மதம் நீ
பேசி நாம் அறியேன்!
சிறு வயதினிலே
மொட்டவிழ்ந்த முற்றத்து மல்லிகை
வாசம் வீசும் இரவுகளில்
கடல்காற்று மேனி தழுவும்
குருகு மணல் முற்றமதில்
அம்மா உன் அருகிருந்து
நாம் கதை பல பேசிய நாட்கள்
இன்னும் பசுமையாய்
எம் நினைவினில்.
பின்னர்
பனிவிழும் குளிர் தேசங்களில்
பெருகிய உறவுகள் சேரவே
மகிழ்ந்து நாம் குலாவிய அந்நாட்களும்
மனதினில் இனிமையாய்
மெல்ல வந்து எமை அடிக்கடி
செல்லமாய் சீண்டிப் போகும்.
இனி அவை ஒரு கனவாயின
தொலைந்து போன அந்நாட்கள்
இனி இன்னும் அதிக தொலைவு ஆயின.
மறைத்து வைத்த உணர்வுகளும்
மறுமுறை காணுகையில்
சொல்ல நினைத்த வார்த்தைகளும்
மனதினில் ரணமாய்
அம்மா இனி அதை
நாம் எங்கு சொல்வோம் !
அன்று
அமைதியான காலையொன்றில்
அன்பான உறவுகள் அருகிருக்க
மௌனப் புன்னகை செய்து
மேனி துறந்து
மேதினியின் காற்று வெளியினில் நீ
மெல்லக் கரைந்தாய்!
இன்று
எம் நினைவினில்
என்றும் அழியாத
ஒளி தரும்
ஒரு புது நிலவென நீ
அழகாய் மீளப் பிறந்தாய்
ஆயிரமாயிரம் பிறை காணவே
எங்கள் தாய் மறைவு கேட்டு
ஈழத்தில் இல்லந்தனிலும்
இங்கிலாந்து, அவுஸ்ரேலியா,
கனடா நாங்கள் இருக்கும்
இடங்கள் தனிலும்
கலங்கிய மனைகள் தனிலும்
இனமான சுற்றத்தார்கள்
எல்லோரி வீட்டிற் தானும்
துக்கம் அனுட்டித்த பேர்க்கு நன்றி!
சோகம் பகிர்ந்திட பேர்க்கு நன்றி!
துயர் கொண்ட பேர்க்கு நன்றி!
விண்டோம் மனமார நன்றி! நன்றி!