

கண்ணீர் அஞ்சலி ! நேற்றுப் போலிருக்கிறது நீயும் நானும் ஊரைவிட்டு பிரிந்தது. காற்று வாக்கில் வந்த செய்தி பொய்யாக இருக்காதா, வென நண்பர்கள் பலரிடம் விசாரித்தேன். தோற்றுப்போய் விட்டோம் எல்லோரும் மெளனமானார்கள். ஓடியாடிய குச்சொழுங்கைகளும் கூடிப்படித்த கல்விக் கூடங்களும் ஆடித்திரிந்த கோயில் விழாக்களும் மீட்டி வந்தென் நினைவை கொல்கிறது. வாசன் வாசனென புன்னகை வாசம்வீச இணுவைக் கந்தன் வீதியெங்கும் .. நேசங்கொண்டு பழகும் உந்தன் அன்பு. தேசம் விட்டு வந்தபின்பும் பாசமுடன் நீ பேசியது இன்னும் நினைவில் .. ஈசனடியில் இளைப்பாறத்தான் இந்த அவசரப் பயணமோ.! உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரை விட்டோடியது காலக் கரையில் ஒவ்வொரு மலராய் உதிர்ந்து போகத்தானோ ..? இணுவில் கரையில் நின்று உன்னை நினைத்தேங்கும் உறவுகள் ஏங்கித்தவிப்பார்களே .. கந்தன் வீதிக் குந்தும் காலாற நடந்த தெருக்களும் உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்குமே ! யாரால யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும். இறைவா இதுவும் உன் திருவிளையாடல் என்றால். கள்ளிச்செடியும் நாகதாளியும் சுற்றியுள்ள ஊர் இந்து மயானம் .. அமைதியாக மெளனமாய் ... ஆட்காட்டி குருவிகளின் சத்தம் மட்டும் .. விட்டு விட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆத்மா சாந்தி பெறட்டும் ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! கண்ணீருடன் சக்திதாசன்