பாதை என்ன பாதுகாவலரே--- பரிசைத்தேடி வந்தவனிற்கு நீ கொடுத்த பதிலென்ன பதுவை மைந்தனே--- மன்னித்துவிடு என்னை மனம் கேட்கவில்லை பிய்ந்துபோன இதயத்து கிழிந்த தசைகளை தைப்பதற்கு தீர்வொன்று சொல் வேண்டிநிற்கும் என் இருகரங்களை இறுகப்பற்று நாவுக்கரசனே--- அடியொன்று எடுத்துவைக்க ஆண்டுகள் பல தேவைப்படுகின்றது அசைவற்றுக்கிடக்கும் என் கால்களுக்கு ஆதரவாயிரு ஆண்டவரின் அரவணைப்பே காற்றைக்கிழித்து கணத்தில் வந்த செய்தி காதைக்கடந்து காணாமல் போயிருந்தால்--- ஒற்றைக்குச்சி பற்றவைத்த காட்டைப்போல் வெக்கைகட்டி வெதும்பியிருக்காது எம் கபாலம் ஐயகோ ---- திரித்துவத்தின் மத்தியே-- விண்ணக வாசல் உனக்காய் திறந்திருந்தாலும் மண்ணுலக உதடெல்லாம் உன்னை உச்சரிக்கையில் சித்தம் கலங்கதே அன்பிற்கு அகலமனத்தில் அரண்மனை கட்டியவன்--' ஆத்திரக்காரனையும் ஆரத்தழுவி இயற்கை எய்யும்வரை இயற்கையாய் வாழ்ந்தவன் அகத்தின் அழகனாய் ஆயிரம் சூரியப்பிரகாசமாய் சந்தனமர சுகந்தம்போல் சகோதரங்களுக்கு சத்தியமாய் இருந்தவன் வெளிவேடம் தெரியாதவன் வெளுத்த வெள்ளைக்கொடிபோல் வெள்ளந்தியாய் பறந்து திரிந்தவன் சமைக்கத்தெரிந்தவன் சமயமறிந்தவன் தரணியுணர்ந்தவன் தன்நலம் பேணாதவன் அரசிலையும் ஆன்மீகத்தையும் ஆழமாய் ஆராய்ந்து பார்த்தவன் உன்னையா நாம் இழந்தோம் உண்மையென உரைக்க முடியவில்லை கானாவூர் கலியாணத்து கனிரசமே--- காய்ந்து கிடக்கும் இவன் நாவை உன் வல்லமையால் ஈரமாக்கு மானிடம் மனம் திரும்பிய மலைப்பிரசங்கமே-- உன் மகிமையால் அடைபட்டுபோன இவன் செவிகளை திறக்கச்செய் கல்வாரிக்குருதியே--- கண்ணற்ற கபோதியின் கன்னத்தில் வழிந்தோடிய திரு இரத்தமே--- இருண்டு கிடக்கும் இவன் விழித்திரைக்கு விம்பம்கொடு.