Clicky

நினைவஞ்சலி
மண்ணில் 23 SEP 1935
விண்ணில் 02 OCT 2020
அமரர் பத்மாவதி பாலசுப்பிரமணியம் 1935 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். சண்டிலிப்பாய் மண்டுமண்டையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

சமர்ப்பணம்

எம்மைப் படைத்துக் காத்த இறைவனாய்
எம்மை மனிதராகச் செதுக்கிய சிற்பியாய்
எமக்கு நற்பண்புகளைப் போதித்த ஆசானாய்
எமக்கு நல்வழி காட்டிய தலைவனாய்
நாம் சிறுவயதில் தந்தையை இழந்தபோது தந்தையாய்
எமக்கு வழிகாட்டி தாயாய்
எமை அரவணைத்துஎம் சுமைகளை
விருப்புடன் தானே சுமந்து
எண்ணிலடங்கா சவால்களை
எதிர் கொண்ட போதும்
இறுதிவரை தன்னம்பிக்கையுடனும்
மிகுந்த மன உறுதியுடனும் வாழ்ந்த
எம் அன்னையின் பத்ம பாதங்களுக்கு
எம் நன்றிகளை சமர்ப்பிக்கும்
உங்கள் பிள்ளைகள்

விக்னேஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஜா, கிருபாகரன், பாலசாந்தி, பத்மராணி, கேதீஸ்வரி, கேதீஸ்வரன், பாஸ்கரன், தமிழ்ச்செல்வன்

சிங்கப்பெண்ணே
அம்மா!

எம்மைப் பெற்றெடுக்க சிங்கமொன்றை
கடைக்கோடிக் காட்டிற்குள்
கடவுள் கண்டெடுத்தார்
பின் இன்னாருக்கு இன்னாரென
கைப்பிடித்தும் வைத்துவிட்டார்
காலம் உருண்டோடிற்று

அம்மா!

சிலவேளை கொடுப்புக்குள் கொஞ்சம் சிரிப்பு வரும்
கதை எழுதத் தொடங்கு முன்னே
அடிப்புறத்தில் ” முற்றும்” என்று எழுதிவிட்டு

முதல் வரியைத் தொடங்குமாற்போல்
உங்களுக்கு “பத்து” என்று பெயர் வைத்து
பின் ஒன்பதுக்கு கணக்குவைத்தீர்
ஆகா! என்னே திட்ட மிடல்

அப்போதுதான் அடைப்பெட்டி விட்டு
இறக்கி விட்ட வண்ணக் குஞ்சுகள் போல்
தினமும் முற்றமெங்கும் பரந்திருப்போம்
வீட்டிற்கு யாரும் விருந்தினர் வந்து விட்டால்
கண்ணூறு படுமென்று வீட்டிற்குள் விரட்டுவீர்
அடுத்தநாள் காலையிலே -முச்சந்தி
மண்ணும் செத்தல் மிளகாயும் உப்போடு சூடமும்
எரிந்த எச்சம் வாசலிலே காய்ந்திருக்கும்

எங்களில் யாரையும் அடித்ததாக நினைவில்லை
அம்மா நீங்கள் தனித்துவமானவர்
உங்களுக்கு மாற்றில்லை

வேட்டைக்காரனோடு எட்டு நாய்கள் துரத்தினாலும்
ஓர் உச்சு உச்சிவிட்டு தப்பி வரும் முயலைப்போல்
எத்தனை நாள் திரும்பி வந்தீர்
இம்முறையும் மீண்டிடுவீர் என்றிருந்தோம்
என்னாச்சு-கால்
தடக்கிற்றோ கல்லேதும் பட்டதுவோ
இல்லை இனியும் ஏமாறக் கூடா தென
எமன் வைத்த பொறிக்குள் சிக்குண்டு போனீரோ

இறுதி நாட்களில் நீங்கள் சொன்ன வார்த்தைகள்
இன்னும் நெஞ்சைக் குடைகிறது
அப்போ பசித்தபோது நிறைவான உணவில்லை

இப்போ ருசிக்க மனசு ஏங்குது
எனினும் உறுப்புகள் ஏற்க மறுக்குதென்றீர்
என் செய்ய

மனஉறுதியுடன் மருத்துவத்துக்கே அதிர்ச்சி தந்தீர்
இறுதியில் உறுதி கொஞ்சம் தளர்ந்திற்றோ
விதி வலிதென்று அறிவோம்
இங்குபோலவே
எங்கும் தனித்துவமாய் வாழ்வீர்

அன்னையே
சொந்தங்கள் எல்லோரும் சொர்க்கத்தில் காத்திருப்பர்
சூரியரும் சந்திரரும் வழிகாட்ட வந்திருப்பர்
சென்றுவருக
வேறு வழி எமக்கில்லை
அன்னையின் ஆத்மா சாந்தி பெறும்
பிள்ளைகள்

பிரியாவிடை

ஒவ்வொரு ஜனனமும் மரணத்தில் முடியும்
ஒவ்வொரு பூக்களும் உதிர்ந்திட வேண்டும்
இதுதான் நிஜமென சிறு மனசறியும்
எனினும் உளமெலாம் பெருவலி பெருகும்

அன்னை இல்லத்தின் அரசியைக் காணோம்
அன்புக் கடலை இனியெப்போ காண்போம்
அனைவர்க்கும் அன்னையாய் அன்புடன் வாழ்ந்தீர்
அன்னையே ஏனிந்த அவசரப் பயணம்

புதுஉயிர் படைக்க பூமிக்கு வந்தீர்
உம்பணி முடித்து நிறைவுடன் சென்றீர்
வந்தவர் யாவரும் சென்றிட வேண்டும்
வரவும் செலவும் சமப்பட வேண்டும்

நோயுடல் களைந்து பொன்னுடல் பெற்றீர்
போய்வாரும் தாயே விடைதரும் நேரம்
அன்னையே உனக்காய் அழுதிட மாட்டோம்
பொன்னுலகில் நீர் புகழுடன் வாழ்வீர்

காலத்தினால் செய்த நன்றி
ஞாலத்தின் மாணப் பெரிது

எங்கள் அன்னையின் நிரந்தர அமைதி நோக்கிய வழியனுப்
பலின்போது எங்களுடன் இணைந்துகொண்ட உறவுகளுக்கும்
நட்புகளுக்கும் யாம் என்றென்றும் நன்றியுடையோம்.
அம்மாவின் மறைவு சம்பந்தமான செய்தி கேள்விப்பட்ட
உடனேயே நாங்கள் சாய்ந்து கொள்வதற்காக தோள் கொடுக்கும்

நோக்கில் இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும்,
நோர்வேயிலும், ஜேர்மனியிலும், இங்கிலாந்திலும், எங்கள் வீடுகளுக்கு வந்த
எல்லோருக்கும் எங்கள் அன்பான நன்றி. குறுஞ்செய்தி Whats app, Viber, Messenger மற்றும் முகநூல் ஊடாக எங்களுக்கு ஆதரவு மற்றும் அனுதாப செய்திகளை அனுப்பியோருக்கும் உணவு சமைத்துக் கொடுத்தவர்களுக்கும் மிக்கநன்றி. Covid-19கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் அம்மாவின் இறுதிச் சடங்கிலும் ஆத்மசாந்திக் கிரியைகளிலும் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வீட்டுக்கு வரும் போதும் இறுதிச்சடங்கின் போதும் பூக்களையும் மலர் வளையங்களையும் கொண்டு வந்து அஞ்சலி செலுத்திய எல்லோருக்கும் நன்றிகள். இறுதிச் சடங்கு மற்றும் ஆத்மசாந்திக் கிரியைகளில் பேருதவியாக இருந்த சிட்னி துர்க்கா தேவஸ்தானச் செயற்குழு மற்றும் பூசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

அமைப்புரீதியாகவும் குழுக்களாகவும் கலந்துகொண்டு எங்களுடன் துயர் பகிர்ந்த பின்வருவோருக்குக் குறிப்பான நன்றிகள்

• கோப்பாய் ஆசிரியர் கலாசாலை (ஆசிரியர் நலன்புரிகழகம்)
• யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
• தெல்லிப்பளை Grass Hoppers விளையாட்டுக் கழகம்
• மகாஜனக் கல்லூரி அவுஸ்திரேலிய பழையமாணவர் சங்க நண்பர்கள்
• Sydney தமிழ் ஆசிரியர்களுக்கும் மற்றும் Combined School கிறிக்கெற் நண்பர்கள்
• மகாஜனக் கல்லூரி1978, 1981, 1982, 1985, 1986, 1989, 1990, 1991, 1993 உயர்தர வகுப்பு நண்பர்கள்
• Newington Cactus நிறுவன பணியாளர்கள்
• Mount Druitt மற்றும் தமிழ் கல்வி நிலைய ஆசிரியர்களும் செயற்குழு உறுப்பினர்களும்
• பேராதனை பல்கலைக்கழக பொறியியல் வகுப்பு E80
• தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை சிரமமான நேரங்களில் பல்வேறு வழிகளிலும் உதவிய எல்லா நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நன்றி நன்றி.

மனமார்ந்த நன்றிகளுடன் பத்மாவதி பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்.

எங்கள் அம்மாவின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய உணவுபோசனத்திலும் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:45 மணியளவில் சிட்னி துர்க்கா தேவஸ்தான மண்டபம்(21-23 Rose Cres, Regents Park NSW 2144)

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்