யாழ். சண்டிலிப்பாய் மண்டுமண்டையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுமைதாங்கி சாய்ந்தால்
எம் மீதிருந்து உம் நிழல் விலகி
ஆண்டொன்றாகுதென
நாட்காட்டி காட்டிற்று
தந்தவனே உம்மை மீளெடுத்துக்கொண்டான்
உங்கள் நினைவுகளை எப்படி எடுப்பான்?
பசுமையான அப்பொக்கிஷத்தை
மனதின்
ஆழத்திலன்றோ புதைத்துளோம்
பனிக்குப் போர்வையாய்
வெயிலுக்கு நிழலாய்
போர்க்காலத்தில் கவசமாய்
இருளில் ஒளியாய்
எம்முடன் கூடவிருந்த அன்னையே
உம் நினைவை நித்தம் சுமக்கின்றோம்
பஞ்சுக் குஞ்சுகளை செட்டைக்குள்
பொத்திவைத்து காக்கைக்கும் பருந்துக்கும்
அஞ்சாது வகை சொல்லி
தான் உண்பதுபோல் பாசாங்கு காட்டி
தன்குஞ்சுக்கு உணவளிக்கும்
தாய்க் கோழி போல்
எமைக்காத்த
அன்னையே உம் நினைவை நித்தம் சுமக்கின்றோம்
நட்ட நடுவானில் இரட்டை எந்திரத்தில் ஒன்று செயலிழக்க
ஒற்றை எந்திரத்தில் பயணிகள் உயிர் காக்கும்
அபூர்வ விமானம் போல் எமை இலக்கு வரை சுமந்த
அன்னையே உம் நினைவை நித்தம் சுமக்கின்றோம்
எம் இளமையில் உம்மை பொன் நகையில் பார்க்கவில்லை
எனினும் எம் வீட்டில் புன்னகைக்குப் பஞ்சமில்லை
நோய் என்று படுத்து என்றுமே பார்க்கவில்லை
வாயிலே வன் சொல் என்றுமே வந்ததில்லை
காவியத்தில் இல்லாமல் அட்சய பாத்திரத்தை
கையில் வைத்திருந்த அதிசய அன்னையே
உம் நினைவை நித்தம் சுமக்கின்றோம்
சூரிய ஈர்ப்பிலே கோள்கள் பயணிக்கும்
ஒவ்வொரு கோளுக்கும் தனிச் சுற்றுப் பாதையுண்டு
ஈர்ப்பு விசை நின்று விட்டால் கோள்களுக்கு திசையேது
அன்னையே
எப்போதும் உம் நினைவெனும் ஈர்ப்பில்
உம்மை ஒன்று கூடிச் சுற்றிவர வரம் தருவீர்
எம்மை படைத்துக் காத்த இறைவனாய்
எம்மை மனிதராகச் செதுக்கிய சிற்பியாய்
எமக்கு நற் பண்புகளைப் போதித்த ஆசானாய்
எமக்கு நல் வழி காட்டிய தலைவனாய்
நாம் சிறுவயதில் தந்தையை இழந்தபோது
தந்தையாய்
எமக்கு வழி காட்டி
தாயாய் எம்மை அரவணைத்து
எம் சுமைகளை விருப்புடன் தானே சுமந்து
எண்ணிலடங்காச் சவால்களை எதிர்கொண்ட போதும்
இறுதிவரை தன்னம்பிக்கையுடனும்
மிகுந்த மன உறுதியுடனும்
வாழ்ந்த
எம் அன்னையின் விட்டகலா நினைவுகளில்
நித்தம் நனைகிறோம்
அன்னையின் ஆத்மா இறையடியில் இளைப்பாறவும் அன்னாரது பிரிவால் துயர் இருளில் மூழ்கி இருக்கும் குடும்பத்தவர்களது மன ஆறுதல் வேண்டியும் பிரார்த்திக்கின்றோம்.