
அமரர் அருணாசல உடையார் நல்லதம்பி அருணாசலம் அவர்கள் குமுளமுனை பெற்றெடுத்த பெரும் புதையல் அமைதி கொண்டதேனே? இப்புவிவாழ்வை நீத்தகாலை மனம் நொந்தவை அன்பின் திருவுருவாய் அனைவரையும் அணைத்திருந்த இன்பின் இன்முகத்து இருப்பிடமாய் இருந்தவரே அருணாசலம் பெயரில் பெருமைதர குலம்விளங்க அருமைதரு குமுளமுனைப் பெருமகனே சென்றதேன்? மனிதநேயம் கொண்ட மாண்புடைய மகத்துவனே இனித்தமுடன் இன்பமுற மக்கள் பணியாற்றுவதிலே உன்னிப்பாய் இருந்துநற் கருமங்கள் செயலாக்கி தனித்துவனாய் வாழ்ந்தாய் ஐயா சென்றதேனோ? அருணாசல உடையார் பரம்பரை விளங்கவைத்த அருணாசலனே அருமைப் பிறவியையா அமைதிகாண அருணாசலமாகிச் சென்றனையோ தவிக்கவிடுத்து அருமையண்ணா அகன்றிடவும் விதியாச்சோ? ஊரார்கூடி உன்தேரிழுக்க ஊக்கமுற நின்றிடவும் ஊர்க்கோடி காணாமல் உன்பாசப் பிணைப்பை ஊரினிலே பதியவிட்டுச் சென்றனையோ சிறகடித்து ஊரவர் மனங்களிலே உன்துன்பைச் சுமக்கவைத்ததேனா? நல்லதோர் உணர்வாளன் நலன்கள்பல செய்திருந்தாய் நல்லவராய் நல்லதம்பி நற்புதல்வனாய்ப் பெயரெடுத்தாய் நல்லவரை வாழவைக்கா நலனற்ற உலகை நீங்கித்தான் நல்லநிலை அமைதிகாணப் பறந்ததேனோ எமைவிடுத்து? ஆத்ம சாந்திக்காய்ப் பிரார்த்திப்பதோடு அன்னாரை இழந்து துயருறும் மனைவி பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்களைத் தெரியத்தருகின்றோம் அன்புடன் தங்கராசா சிவபாலு குமுளமுனை-கனடா
