மரணத்துடன் ஒரு பயணம்… இன்றிருப்போர் நாளை இல்லை விழித்திருப்போர் உயிர்ப்பதில்லை வாழ்ந்திருப்போர் நிலைப்பதில்லை வாழ்க்கையின் நியதி! இன்றைய விடியல் விடியாது போயின் நாளைய உலகம் என்னை இழந்து விடும்; இயற்கையின் நியதி! நாள் என் செயும்; கோள் என் செயும் எனக்கான நேரம் நெருங்கும் போது விதிதான் என் செயும்? என் ஆயுள் காலம் முடியுமானால் தடுப்பதற்கு நான் மார்க்கண்டேயனுமல்ல, சாவித்திரியுமல்ல தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்வேன் தன்னையே அடக்கம் செய்ய! நாளை நான் இல்லாது போயிடினும் என் படைப்புகளால் வாழ்வேன், அல்லால் யாரேனும் ஒருவர் நினைவிலேனும் வாழ்வேன்…! மரணிக்கும் விநாடிகளுக்கு என்றுமே நான் அஞ்சியதில்லை மரணத்தை எதிர்நோக்கும் மாண்பிலிருந்தும் விலகியதில்லை! நாளைய பொழுது விடியாது போயிடின்... இன்னொரு விடியலை நோக்கிப் பயணிப்பேன்! மரணத்தின் இறுதி பிடியில் துடித்திருக்கும் உயிர்; மரணத்தோடு பயணிக்கையில் (உங்களுடன்) பிரியாது வாழ்ந்திருக்கும்! தோழி சண்பகவள்ளியின் படைப்பிலிருந்து மேற்கண்ட வரிகள் சில, நான் அறிந்த கண்ட பழகிய சின்னமாமாவின் நினைவுகளை கருத்துக்களை எண்ணங்களை வாழ்க்கையை மிகச்சரியாகப் பிரதிபலிப்பவை என்று எண்ணுகிறேன். என் மனதிலும் ஆத்மாவிலும் கலந்திருக்கும் சின்னமாமாவுக்கு ஆத்ம வணக்கங்கள.