மன்னார் பரப்புக்காலைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வதிவிடமாகவும், உப்புக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கனகம்மா அவர்களின் நன்றி நவிலல்.
எழுவருடன் ஒருவனாய் முருகன் என எனை ஈன்றீர்
இவன் தேவகாந்தன்
அவன் முருகன் அருளில் வந்து கிடைத்த வாரிசென்று,
கந்த சஸ்டி விரதமிருந்து
நொந்து பெற்று வளர்த்தெடுத்தீர் !!
அள்ளியெடுத்து அமுதூட்டி உலகைக் காண உயர்த்தி வைத்தீ்ர்
கல்வி தந்து, கலை தந்து,
நெஞ்சு நிறை
இறை நம்பிக்கை தந்து,
இல்லறத்தின் நல் வழியும் காட்டி,
பேரன்களையும் கொஞ்சி மகிழ்ந்தீர்.
“அம்மா தம்பி” என்ற அக்காவின் குரல்கேட்டால்
என்குரல் பிராணமென உடலியக்கம் அதிகரித்து
உற்சாக உலகில் சிரித்து தலையசைப்பீர்கள்.
“உனக்கு வியாழன் கூடாது”
“நான் விரதமிருக்கிறன்” என்று சொல்லி
அக்காமாரோடு அடம்பிடித்து மாமிசம் துறந்த மனுசியாய்,
என் துயர் கழைய விளைந்த தாயே !!
நீ எத்திசை சென்றாலும்
“உடன் வருவார் வைரவர்” என்று
நெற்றியில் நீறிட்டு வாழ்த்தி அனுப்பும் என் தெய்வமே
இன்றுமக்கு நீறிட்டு, அலை கடலில் நீராடி
அந்திமக் கடமைகளையும் ஆற்றிவிட்டு வந்துவிட்டேன்,
இனி எப்பிறப்பில் காண்பேன் யான் உம்போல் ஒரு தாயை?
எப்பிறப்பில் காண்பேன் நான் உம்போல் ஒரு கலங்கரையை?
எப்பிறப்பில் காண்பேன் நான் உம்போல் ஒரு நேசத்தின் பெரு நதியை?
வற்றாத சுனையாகி வாரி வழங்கிய வள்ளலே !!
இக்காலம் முழுவதும் இறைஞ்சினும் இனி உமை யான் காணேன்.
விளங்கிவிடா இப்பிறப்பின் அழியாத சூட்சுமத்தில்,
வந்தவிதி முடிந்ததென பந்தங்கள் கழைந்தெறிந்து
தக்கதொரு நேரத்தில்
தாயே நீர் புறப்பட்டீர் !!
விழி நிறைந்த நீரோடு வழிபார்த்து நின்றிடினும்,
பந்தபாசமெனும் கட்டுண்ட கயிறறுத்து
மூலச் சித்தன் சிவனருளில் உம் சீவன் இளைப்பாறி,
நிலையான இன்பத்தை நித்தியமும் அடைந்திருக்க,
நீங்கள் காட்டிய நல்வழியில் பயணித்து
உங்களின் வைரவரையும் முருகனையும் வணங்கி நிற்கிறேன்.
இளைப்பாறுக தாயே !!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும், 07-09-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் உப்புக்குளம் மன்னாரிலுள்ள அவரது இல்லத்திலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.