
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சுவிஸ் Oberburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா
“அப்பாட்ட போட்டு வாரேன்” என்று
சொல்லி போய்வந்த வீட்டிற்கு
இனி எப்படி சொல்லி
எப்படி வந்து போவது!
நீ இருந்த அறை
இப்போதும்
நீ இருக்கும் அறையாகவே இருக்கிறது.
உன்னால் இஸ்திரி போடப்பட்ட ஆடைகள்
அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
உனது வங்கி அட்டையும்
“அப்பா காசுவேணும்” என்றதும்
ஓடிவந்து எடுக்கும்
பணப்பையும்
அதே இடத்திலதான்.
உனக்கு குடிக்கவே பிடிக்காத
வைட்டமின் நிரம்பிய பால்ப் போத்தல்கள்
அலமாரியின் கடைசி தட்டிலும்
உன்னை குணப்படுத்தி விடலாம்
என்று பொய் நம்பிக்கை தந்த
ஒரு தொகை மருந்துகள்
மேல் தட்டிலும் இருக்கின்றன.
குளியல் அறையில்
உன்
மேல் உடம்பை துடைக்கும் துணி
கீழ் உடம்பை துடைக்கும் துணி என
மருத்துவ தாதியினால் எழுதி ஒட்டப்பட்ட
ஸ்டிக்கர்
சற்று நிறம் மாறிப்போயிருக்கிறது.
இந்த தொலைபேசிதான் வேணும் என
நீ
அடம்பிடித்து
திருத்தவே முடியாமல்ப் போன
உன் கைபேசி உன்னைப்போலவே
இயக்கமில்லாமல்தான் இன்னும் இருக்கிறது.
எமது கைபேசிகளும்
நீ அழைத்த அழைப்புகள்
தவறவிட்ட உன் அழைப்புகள் என
எம்மை அழவைக்கப் போதுமான
நினைவுகளால் நிரம்பியிருக்கிறது
எமக்கெல்லாம் நிழலாக இருந்த நீ
உன் அறையில் நிழற்படமாக மட்டுமேயாகி
இன்றோடு ஓராண்டு
எமக்கென்னமோ
இல்லாத உன்னோடு நாம் இன்னும்
நெருக்கமாக இருப்பதுபோல உணரமுடிகிறது.
உன் ஆத்மா ஆதிசிவன் அடியில்
அமைதிகொள்ளட்டும்
உன் ஆசீர்வாதம் எம்மை ஆளட்டும்