Clicky

பிறப்பு 01 OCT 1948
இறப்பு 23 FEB 2026
திருமதி மங்கையற்கரசி கமலேஸ்வரன்
வயது 77
திருமதி மங்கையற்கரசி கமலேஸ்வரன் 1948 - 2026 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி கமலேஸ்வரன் மங்கயற்கரசி, எனது சிறியதாய் 23/02/2026 அன்று தனது 77வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி எமது இதயங்களை கனக்கச் செய்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன், 27/12/2025 அன்று, அவரின் வாழ்க்கைத் துணை எமது சித்தப்பா காலமானார். அந்த இழப்பின் நிழல் இன்னும் விலகவில்லை; அதற்குள் அவரும் தனது அடுத்த பயணத்தைத் தொடங்கிவிட்டார். சுதந்திரம் என்ற பெயரில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து ஆட்சியை பொறுப்பெடுத்த 1948ல் கண்திறந்து இந்தப் பூவுலகை பார்த்த அவர், அமெரிக்க சுதந்திரத்தின் 250 வருடத்தின் வேளையில் தனது கண்களை நிரந்திரமாக மூடிக்கொண்டார். இலங்கை தபால் அலுவலகத்தில் பணியாற்றிய அவர், அஞ்சல் சேவை என்பது வெறும் கடிதங்களை அனுப்பும் பணியல்ல; அது மனிதர்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை இணைக்கும் பாலமாகும் எனச் சொல்வார். தாய், தந்தையரை இழந்த வெற்றிடத்தில் இருந்த எனக்கும் என் சகோதரங்களுக்கும் “சிறிய தாயார்” என்ற பெயரைத் தாண்டி, உண்மையான தாயாகவே இருந்தார். பாதுகாப்பும் பராமரிப்பும் மட்டுமல்ல, மன உறுதியையும் வாழ்வை எதிர்கொள்ளும் தைரியத்தையும் கூடவே அவர் கற்றுக்கொடுத்தார். அவர் தனது உடல்நிலையைத் தெளிவாகப் புரிந்திருந்தார் என நான் நம்புகிறேன். “மோசமான உடல் நிலையுடன் இருந்து எனக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுப்பதைவிட, வாழ்க்கையின் அடுத்த பயணத்தைத் தொடங்கிவிட வேண்டும்” என்று சிரிப்புடன், ஆனால் மிகத் திடமாக அவரின் கணீர் என ஒலிக்கும் குரலில் கூறிய அந்தச் சொற்கள்—அவரின் மனத் தெளிவிற்கு சான்றாக உள்ளது. “வாழ்க்கை அழுவதற்கும் சிரிப்பதற்கும் மட்டுமல்ல சிந்திப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்” என்றார். அன்பு செலுத்தியவர், ஆறுதல் அளித்தவர், கடமை நிறைவேற்றியவர், துன்பத்தில் தைரியம் காட்டியவர் — இவ்வாறான ஒரு வாழ்க்கை ஒருபோதும் அழியாது. அது நினைவுகளில் மட்டுமல்ல; எங்கள் நடத்தையிலும் நாம் எடுக்கும் முடிவுகளிலும் தொடரும். இவை அனைத்தும் எங்களுக்கு கலங்கரை விளக்காக இருக்கும். சிறிய தாயே, நீங்கள் எங்கள் வாழ்க்கையில் கிடைத்தது ஒரு ஆசீர்வாதம். தாய்க்கு சமமான அந்தப் பெருமைக்குரியவரே, நிம்மதியாக தூங்குங்கள். உங்கள் நினைவு எங்கள் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும். உங்கள் வதனி
Write Tribute