Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 JUL 1949
இறப்பு 01 NOV 2023
அமரர் மகாதேவன் கிருஷ்ணபிள்ளை 1949 - 2023 கரம்பன் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரம்பன் மேற்கு அயித்தாம்புலம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பு, சுவிஸ், சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் கிருஷ்ணபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி, நன்றி நவிலல்.

உன்செடியில் பூத்த மலர்கள்
எமை இங்கு வாடவிட்டு
வானுறையும் தெய்வமாகிவிட்ட
அன்புத் தெய்வத்திற்கு
இம்மலரை சமர்ப்பிக்கின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

வாழ்கை வரலாறு

இலங்கையின் வடபாகத்திலுள்ள யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்புடைய ஊர்காவற்றுறையில் கிருஷ்ணபிள்ளை அன்னம்மா ஆகியோருக்கு இளைய புதல்வராக அமரர் மகாதேவா அவர்கள் 27 - 07 - 1949 ஆம் ஆண்டு இப் பூவுலகில் அவதரித்தார்.

இவர் பலராலும் மகாதேவன் என அறியப்பட்டார். கரம்பனில் இவரை பலரும் "பெரிய தேவன்" என அழைத்தனர்.

இவரது தந்தையார் கிருஷ்ணபிள்ளை சித்த ஆயுர்வேத மருத்துவராக "பரியாரி செல்லையா" எனும் பெயருடன் மேற்கு கரம்பன் அயித்தாம்புலத்தில் கடமையாற்றி வந்தார். மருத்துவராக பணியாற்றுவதற்கு முதல் சிங்கப்பூரிலும் சிறிது காலம் கடமையாற்றியுள்ளார்.

இவரது சிறிய தந்தையார் "பரியாரி சுந்தரம்" 1950 களில் பிற பிரதேசங்களிலும் எல்லோராலும் அறியப்பட்ட புகழ்வாய்ந்த சித்த ஆயுர்வேத மருத்துவராவார்.

இவரது தாயார் அன்னம்மா தொன்மை வரலாற்றுச் சிறப்புடைய கந்தரோடையை பூர்வீகமாகக் கொண்டவராவார்.

இவர் பிறந்து ஐந்தே மாதங்களில் தனது தந்தையை வருத்தம் காரணமாக இழந்தார்.

தனது தாயாரினதும், தமையன்மார் தளையசிங்கம், சத்தியசீலன், தமக்கைமார் நாகேஸ்வரி, நிலேசலாதேவி (குஞ்சுமணி) ஆகியோரின் அரவணைப்பிலும் வளர்ந்து பெரியவரானார்.

இவரது தாயார் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவரையும் இவரது சகோதர சகோதரிகளையும் வளர்த்து வந்தார்.

 இவர் தனது கல்வியை பெற்றுக்கொள்ள கரம்பன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் சேர்ந்து கொண்டார்.

இவர் பாடசாலை காலங்களில் மிகுந்த தெய்வ பக்தியுடையவராக காணப்பட்டார்.

இவரது பாடசாலையில் உற்ற நண்பர்களாக ஜெயானந்தன் குணபாலன் (பருத்தியடைப்பு), குணரட்ணம் பரராஜசிங்கம், ஸ்ரீ ரங்கநாதன் மற்றும் அயுதாம்புலத்தில் உற்ற நண்பர்களாக ஆசைப்பிள்ளை அரவிந்தன், முத்தையா சச்சிதானந்தன் (சச்சி), கனகசபை சுந்தரேசன் ஆகியோர் காணப்பட்டனர்.

இவர் தனது கல்வியை கல்வி பொது சாதாரண தரம் வரை படித்து முடித்துவிட்டு கொழும்பு புறக்கோட்டையிலுள்ள அரிசி மொத்த விற்பனையாளர்களான விஜயா ரேடர்ஸ் இல் பயிற்ச்சி காசாளராக சேர்ந்து கொண்டார்.

தனது கடின உழைப்பாலும், திறமையாலும் முதன்மை காசாளரில் ஒருவராக, தனது நண்பரும் சக முதன்மை காசாளருமான கார்த்திகேசு மாணிக்கவாசகருடன் இணைந்து, ஓர் முகாமைத்துவ கணக்காளருக்கு உரிய பொறுப்புகளுடன் கடமையாற்றி வந்தார்.

கால ஓட்டத்தில் தானே சுஜமாக தனது வியாபார முயற்ச்சிகளை 1970 களின் நடுப்பகுதியில் தொடங்கினார்.

வவுனியாவிலும், கொக்குவிலுள்ள பூநாறி மரத்தடியிலும் (தனது மூத்த தமக்கையாரின் வீட்டோடு கூடிய கடைத் தொகுதி) மளிகைப் பொருட்கள் விற்கும் வியாபாரத்தை மேற்கொண்டார். மொத்தமாக காய்ந்த மிளகாய்களை வாங்கி விற்கும் வியாபாரத்திலும் ஈடுபட்டார்.
இவரது வியாபார நடவடிக்கைகளில் இவருக்கு உதவியாக கரம்பன் அயுதாம்புலத்தை சேர்ந்த செல்லையா நாராயணன் பல விதங்களிலும் உதவியாக இருந்தார்.

இவ்வாறான காலப்பகுதியில் தனது இருபத்தாறு வயதில் அனலைதீவைச் சேர்ந்த கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் புதல்வியான மகேஸ்வரி அவர்களை கரம்பிடித்து தனது இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.

இவருக்கு மைத்துன மைத்துனியராக வாய்க்கப்பெற்ற மங்கையற்கரசி, லோகாம்பிகை, துரைபாலசிங்கம், நடராஜா ஆகியோருடன் நல்லுறவு பேணிவந்தார்.

தனது இல்லறத்தின் பயனாக மதிவண்ணன், தவசீலன் எனும் புதல்வர்களை பெற்றெடுத்து இல்லற வாழ்வில் இன்புற்றிருந்தார்.

1983 ஆம் ஆண்டு கலவரங்களால் ஏற்ப்பட்ட பாதிப்புகளாலும் வியாபாரங்களில் ஏற்பட்ட நட்டங்களாலும் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இவ்வாறான காலகட்டத்தில், தனது மூத்த தமக்கையாரினதும், அவரின் கணவரின் உதவியினாலும் 1984 ஆம் ஆண்டு சுவிற்சலாந்திற்க்கு சென்றார்.

சுவிற்சலாந்தில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பல்வேறு பட்ட வேலைகளையும் செய்து வந்தார்.

1985 இலும் 1987 இலும் தனது இரு மூத்த சகோதரர்களினதும் அடுத்தடுத்த மறைவுகள் இவரை கவலைகொள்ள வைத்தது.

அக் காலகட்டத்தில் 1991 ஆம் ஆண்டு இவரது மனைவி மற்றும் மகன்மார்கள் இவரது மனைவியின் சகோதரரின் உதவியால் கனடாவிற்க்கு குடிபெயர்ந்தார்கள்.

சுவிற்சலாந்திலிருந்து தனது கனடாவிலுள்ள குடும்பத்தினர், இலங்கையிலுள்ள தனது தாய், சகோதர சகோதரிகள் குடும்பத்தினருடன் தனது உறவை பேணி வந்தார்.

1998 ஆம் ஆண்டு மாசி மாதம் தனது இளைய தமக்கையாரின் புதல்வன் பற்குணன் கல்கிஸ்ஸ (மவுண்ட் லவனியா) கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தது அவரை மிகவும் கவலை கொள்ள வைத்தது.

1998 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சுவிற்சலாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தார். அவர் திரும்பவும் சுவிற்சலாந்திற்கு போக விருப்பமில்லாமல் நிரந்தரமாக இலங்கையில் தங்க முடிவெடுத்தார்.

1998 ஆம் ஆண்டு ஆனி மாதம் தமிழ் நாட்டிலுள்ள கோவில்களை தரிசிப்பதற்காக இந்தியா சென்று ஒரு மாதத்தின் பின் மீண்டும் இலங்கையை வந்தடைந்தார்.

கால ஒட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த தனது மூத்த புதல்வனின் திருமணத்தில் கலந்து சிறப்பித்து இன்புற்றிருந்தார்.

இவ்வாறாக காலம் நகர்ந்து கொண்டிருந்தபோது பேரிடியாக 2011 ஆம் ஆண்டு தை மாதத்தில் தனது இளைய தமக்கையார் புற்று நோய்க்கு ஆளாகிய நிலையில் அவரை இழக்க நேரிட்டது அவரை பெரிதும் வாட்டியது.

இவ்வாறான காலப்பகுதியில் 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தனது இளைய புதல்வனின் திருமணத்தில் கலந்து கொண்டது அவரை ஆறுதல் படுத்தியது.

2014 ஆம் ஆண்டு புரட்டாதியில் தனது மனைவியை கனடாவில் புற்று நோய்க்கு இழந்தது அவரை மீண்டும் துயரத்துக்குள் ஆழ்த்தியது.

2019 ஆம் ஆண்டு மார்கழியில் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த தாயை இழந்தது அவரை பெரிதும் வாட்டியது.

கனடாவிலுள்ள தனது பிள்ளைகளுடன் தொலைபேசியூடாக கதைத்தும் பேரப்பிள்ளைகளை நினைத்தும் அமைதியாக தனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்.

வெளிநாடுகளிலுள்ள இவரது மூத்த தமக்கையாரின் பேரப்பிள்ளைகள் இலங்கை வரும்போது இவரை "தேவன் பாட்டா" என அழைப்பது இவரை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது.

காலை, மாலை நேரங்களில் சொய்சாபுரவிலிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்க்கு அருகிலுள்ள உணவகங்களில் தேநீர் அருந்துவதோடு ஓய்வெடுப்பதும், சொய்சாபுர நூலகத்திற்க்கு அருகாமையிலுள்ள மரநிழலுடன் கூடிய திண்ணையில் இவரது நண்பர்களான N. நாகேந்திரன், Dr. P. P. ஜெகநாதன், P. நடராஜா, P. விக்னேஸ்வரன், K. யோகரட்ணம், S. தர்மேஷ், A. S. தேவநேசன், K. சிவபாலன், T. குகன், S. ஜெயதேவன், ஜெயக்குமார், போல், இந்திரன், குமாரசாமி ஆகியோர்களுடன் கதைப்பதும், ஓய்வெடுப்பதுமாக தனது பொழுதை சந்தோசமாக நகர்த்திக்கொண்டிருந்தார்.

இவ்வாறாக காலம் ஓடிக்கொண்டிருந்த போது, 2023 ஆம் ஆனியில் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த தனது ஒரே சகோதரியையும் இழந்தது அவரை மிகவும் பாதிப்படைய செய்துவிட்டது.

இப்படியான காலத்தில் சிறிது சுகவீனமாக காணப்பட்ட அவர் ஈரல், சிறுநீரக பாதிப்பு காரணமாக மாரடைப்பால் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் 01 - 11 - 2023 புதன்கிழமை மத்தியானம் எம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார்..!
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.