
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி கனகமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்மை தாலாட்டி வளர்த்த முகத்தை
பார்க்க கிடைக்காமல் பரிதவித்து தவிக்கின்றோம்
அம்மா! ஆண்டு ஒன்று ஆனதுஇன்று
ஆறவில்லை துயர் நினைவு
எம்மை சுமந்து பெற்று ஏற்றங்கள்
காண வைத்து கண்ணின்
இமைகள் போல் காத்த காலங்களை
எண்ணி எண்ணி அழுகின்றோம்
அம்மா எப்போது உன் கடன் தீர்ப்போம்?
அப்பாவை கரம்பிடித்து
அவர் தம் ஊரான மயிலிட்டி மண்ணதனை
மனதார ஏற்று நின்றாய்
இடைநடுவில் எம் தந்தை தவிக்க விட்டு
துயர் தந்து சென்ற போது
இடர் சுமந்தும் எம்மை காத்தாய்.
நான்கு பிள்ளைகளையும் நலமுடனே வளர்த்தெடுத்து
நல்லபடி வாழ வைத்தாய்.
உயிர் பிரியும் தருணத்தில் ஒருவர்கூட
உன்னருகில் இல்லையே உள்ளம் உறுத்துதம்மா….
நினைக்கும் போது நித்திரை இல்லைத்தாயே!
தலைசுற்றி நீ வீழ்ந்த செய்தி கேட்டு
மனமுடைந்து போனேன் அம்மா...
உன் உயிர் இழுக்கையிலே
உயிர் பிரியும் வேளையிலே
என்னென்ன நினைத்து- நீ
உன் உயிரை விட்டாயோ!
பிறவி முழுவதும் பிள்ளைகளுக்கென வாழ்ந்தவளே!
உன் கடைசி பிரிவை எண்ணி
கண்கலங்கி நிற்கின்றேன்.
கனிவான உன் பேச்சால் - என்
கண்ணீரைத் துடைத்திடாயோ?
அம்மா.....உங்கள் ஆன்மா இளைப்பாறுதல்
அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காலக் கடன் சுமந்து கண்ணீர் விட்டபடி உன் மகள்……..