தனது உன்னதமான வெற்றிகரமான செயல்களால் மற்றவர்களைக் கவரக்கூடியவன் என்பதனால் என்னவோ பெற்றோர் "ஜெயக்காந்தன்" என்று பெயரிட்டனர் போலும். "ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" என்பதற்கிணங்க வாழ்ந்து காட்டிய மேலோன். "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்" என்று வியக்கவைக்கும்படி இன்றும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பவன். குடும்பத்திற்கு குலவிளக்கானான். தம்பிக்கும் தங்கைகளுக்கும் அண்ணன் ஒரு கோயிலானான். கடமையே கண்ணாகினான். காலத்தை பொன்னாக்கினான் நண்பர்களை இன்முகத்துடன் இனங்கண்டான். பெரியவர்களை மதிப்பதில் மகோன்னத பண்பாளன். என்னதான் அரும்பெரும் சாதனை செய்தபோதும் பெருமைகொண்டு பீற்றித்திரியாத சாது. திடமான கொள்கைபல கொண்டான். மொத்தில் அவனுக்கு நிகர் அவனே என்பதில் ஐயமேன்! பிறரை நேசிக்கும் பிறரால் நேசிக்கப்படும் உயிர் அவன். அன்பான பாசப்பிணைப்பில் அவனது குடும்பம் முக்குளிக்கையில் அணுகியதோர் அரக்க ஜந்து அவனை!!! பூதவுடலை அது அழித்தாலும் அவன் புகழுடலை அழிக்கமுடியுமா? புன்னகை தவழும் அழகுவதனத்தைத்தான் மனித மனங்களிலிருந்து விலக்க முடியுமா? எங்கள் இதயத்திலிருந்துவரும் கண்ணீர்த்துளிகளிலே கரையும் அன்பைத்தான் நிறுத்த முடியுமா? ஆனாலும் அவன்வழியில் அவன் வாரிசுக்களின் எதிர்காலம் வளம்பெற வாழ்த்தி வணங்கிடுவோம் அவன்தாளை.?