Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 SEP 1966
இறப்பு 07 APR 2023
அமரர் கிருஸ்ணகோபால் புஸ்பலதா
வயது 56
அமரர் கிருஸ்ணகோபால் புஸ்பலதா 1966 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணகோபால் புஸ்பலதா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அமரர்.திருமதி.கிருஷ்ணகோபால் புஸ்பலதா அவர்களின் நெஞ்சை விட்டகலா நினைவலைகள்

திருகோணமலையில் எழில் மிகு கிராமங்களில் ஒன்றான குச்சவெளி மண்ணில் கணேசபிள்ளை செல்வமணி தம்பதிகளின் நான்காவது செல்வப் புதல்வியாக 1966ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09ம் திகதி அவதரித்த இவருக்கு பெற்றோர் புஸ்பலதா என்று பெயரிட்டு லதா என்று செல்லமாக அழைத்தனர்.

இவர் தனது ஆறு சகோதரர்களான கனகசுந்தரம், சியாமளா, தேன்மொழி, தயா, உதயா, ராதா ஆகியோருடனும் மருமகன் தீபனுடனும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டி மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். தனது தந்தையின் சகோதரியான கனகையா மாமியுடன் அன்புடனும் அவரது அரவணைப்பிலும் செல்ல மகளாக வளர்ந்தார். இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றார். கல்வி கற்று முடிந்ததும் தான் முதல் கல்வி கற்ற தனது ஊர் பாடசாலையிலேயே ஆசிரியராக நியமனம் பெற்று அர்ப்பணிப்புடன் சில காலம் கடமையாற்றி பின்னர் இடமாற்றம் கிடைத்து திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி தனது பணிகளை சிறப்பாக செய்திருந்தார். திருமலை பத்திரகாளி அம்பாள் மீது அதீத பக்தி கொண்டு கேதார கௌரி விரதத்தையும் அனுஷ்டித்து வந்தார். பருவ வயதை அடைந்ததும் புலோலி தெற்கை பிறப்பிடமாகக் கொண்ட திரு.வீ.கிருஷ்ணகோபால் அவர்களை 2000ம் ஆண்டு மணம் புரிந்து ஜேர்மனியில் வாழ்ந்து வந்தார். தனது கணவரின் சகோதரர்களான வேணி, பாமா கண்ணண், முகுந்தன், முரளி வாசன் பாமதி ஆகியோருடனும் மாமா, மாமியுடனும் அளவுக்கு அதிகமான அன்பும் பாசமும் காட்டி மகிழ்வுடன் இருந்தார்.

இவ்வாறு வாழ்ந்து வருகையில் இல்லறம் என்னும் நல்லறத்தின் பயனாக அவர்கள் யதுமி, யதுமிதன் என்னும் இரண்டு குழந்தை செல்வங்களைப் பெற்றெடுத்தனர். கணவரின் உறுதுணையோடு குழந்தைகளை கற்பித்து ஆளாக்கி அவர்களின் வளர்ச்சியிலும் சந்தோசத்திலும் தானும் பங்கு கொண்டு அவர்களை அன்புடன் வளர்த்து வந்த வேளையில் அவரது 56வது அகவையில் மாரடைப்பு என்னும் கொடிய நிகழ்வினால் கணவர் குழந்தைகள் அருகில் இருக்க அன்னாரின் இன்னுயிர் விண்ணுலகை நோக்கி சிவனின் பாதக்கமலம் சென்றடைந்தது. லதா உங்கள் திடீர் மறைவு என்னால் தாங்க முடியவில்லையே. எப்படி என் மிகுதி வாழ்நாட்களை நகர்த்திச் செல்லப் போகிறேனோ என்று மௌனத்தில் புலம்பும் கணவர்.

அம்மா நீங்கள் எம் தெய்வம் இவ்வளவு விரைவில் எங்களை விட்டுப் பிரிவீர்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. என்று கதறும் குழந்தைகள் இத்துயரச் செய்தியைக் கேட்டு கதி கலங்கி கதறி அழும் சகோதரர்கள் மாமி, மைத்துனர்கள் மைத்துனிமார். எப்படி பொறுப்பது உங்கள் பிரிவை பொறுக்க முடியவில்லையே உங்கள் பிரிவால் நாமும் கலங்கி கதறி அழுதோம். உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்து மனமுருகி ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

எங்கள் அருமைச் சகோதரியே!
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள் எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?

உங்கள் ஆத்மா சாந்தியடைய

இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

நன்றி நவிலல்

07.04 2023 ம் திகதியன்று இறையடி எய்திய எமது அன்புத் தெய்வம் அமரர் திருமதி.கி.புஸ்பலதாவின் பிரிவுச் செய்தி கேட்டு நாம் துடித்த வேளை உடனடியாக தொலைபேசியிலும், நேரடியாகவும் இரங்கல்கள், ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் எந்தச் சிரமத்தையும் பாராது அயல் நாடுகளில் இருந்து வந்து ஆறுதல் கூறி துன்பத்தை எம்முடன் பகிர்ந்து உடனிருந்து சடங்குகளிலும் கிரியைகள் செய்வதிலும் கலந்து கொண்டவர்களுக்கும், எல்லா விதத்திலும் தாமாக முன்வந்து உணவுகள் வழங்கி மற்றும் ஏனைய அளப்பெரிய உதவிகள் செய்த அயலவர்கள் மற்றும் அனைவருக்கும் எமது இதயம் கனிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம், கணவர், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.