எங்கள் வாழ்வில் அழியாத தடம் பதித்த ஒரு அருமையான மனிதரை—எங்கள் அன்பிற்குரிய கார்த்தி அண்ணா, அவரது மறைவு, ஒரு சகோதரனை, ஒரு நண்பனை, இழந்த வலி என எங்கள் அனைவரின் உள்ளங்களையும் கனமாக்கியுள்ளது. கார்த்தி அண்ணா, வல்வெட்டி நலன்புரிச் சங்கம் (VWA – Toronto) அமைப்பில் பொருளாளர், செயலாளர், குழு உறுப்பினர் எனப் பல பொறுப்புகளை ஏற்று, வல்வெட்டி மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். 1990களின் கடுமையான போர்கால சூழ்நிலையிலும், “எம் ஊருக்கு ஒரு நல்ல நூலகம் வேண்டும்” என்ற தொலைநோக்குடன், வல்வெட்டி பெரிய நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப நிதி திரட்டலில் அவர் முக்கிய பங்காற்றினார். டொராண்டோவில் நடைபெற்ற நன்கொடை நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி, நூலகங்கள், பள்ளித் திட்டங்கள், சிவன் கோவில், பெரியதம்பிரான் கோவில் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டியதில் அவர் எப்போதும் முன்னணியில் இருந்தார். போர்க்கால சூழ்நிலையில் கூட, வல்வெட்டி மாணவர்கள் கணினிக் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரத்தியேக ஆசிரியர்களை ஏற்பாடு செய்தார். பெண்களுக்கான தையல் நிலையங்கள் உருவாக்கி, அவர்களுக்கு சிறுதொழில் வாய்ப்புகளை உருவாக்கிய திட்டங்களிலும் அவர் தன்னலமின்றி பங்கெடுத்தார். தேவை ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்திலும், உதவும் கரம் நீட்டத் தயங்காத மனம் நன்றான மனிதர் அவர். அவரது திடீர் மறைவு, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த எங்கள் அனைவருக்கும்— ஒரு அளவிட முடியாத பேரிழப்பு. ஆனால், அவர் விட்டுச் சென்ற நினைவுகள், நற்குணங்கள், சேவை மனப்பான்மை— இவை அனைத்தும் எங்கள் உள்ளங்களில் என்றும் உயிரோடு நிலைத்திருக்கும். எங்கள் அனைவரின் சார்பாக, அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். கார்த்தி அண்ணா அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். 🕊️ ஓம் சாந்தி 🕊️