வாசுதேவா.... உன் இருப்பை எம் இதயத்தில் இருத்திவிட்டு - இங்கு இல்லாதோர் வாழும் இடத்திற்கு இடம்பெயரும் நண்பா... இடம் பெறட்டும் உன் பயணம் இனிய நினைவுகளை இவ்விடம் விட்டு விட்டு. இடம் பெயர்தல் எமக்கொன்றும் புதிதில்லையே இருப்பிடம் துறந்து விட்டு இன்னோரிடம் உய்த்தல் நமக்கென்றும் புதிதில்லையே ஆனால் எங்கிருந்தாலும் இருப்பைப் பதிவு செய்வதையும் எம் நட்பை பகிர்ந்து கொள்வதிலும் இணைப்போடிருந்தோம்– அந்த இணைப்பைத் துண்டித்து விட்டு இணைப்பில்லாத இருப்பிடம் நோக்கி நீ மட்டும் செல்கின்றாய்... வானவெளியில் வனப்பைக் காட்டி விலகிக் கலையும் வானவில்லைப் போல் வஞ்சனையில்லாமல் அன்பை வாரிக் கொட்டி வசீகரப்படுத்திவிட்டு வழி நடுவே பிரிந்து செல்கிறாய்... பாசக்கயிற்றை யார் வீசினாலும் பற்றிக் கொள்பவன் நீ... பாசம் காட்டுவதில் பாரபட்சம் பார்க்காதவனென்பதால், வீசியது யாமனென்று தெரிந்தும் பற்றிக் கொண்டு பரலோகம் புறப்பட்டு விட்டாய்... துடுப்பாட்டத்தில் அடித்து ஆடத்தெரிந்த நீ எதிர் வந்த சுழலை தடுத்து ஆடமுடியாமல் அறுபத்தியொரு ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் ஓடியாடியது போதுமென்று ஓய்வை அறிவித்து விடைபெற்று செல்கின்றாய்... ஆட்டமிழந்தாலும் ஆட்டத்தை விட்டு விலகினாலும் ஆட்ட நாயகன் நீதான்... காரணம்... நீ சேகரித்த ஓவ்வொரு எண்ணிக்கையும் அன்பாட்டத்தாலும் நட்போட்டத்தாலும் என்பதால். நின்று நிதானமாக நிலைத்து இன்னும் கொஞ்சம் ஆடியிருக்கலாமே... ஓய்வு முடிவை ஏற்க மறுத்தாலும் உன் முடிவுக்கு கட்டுப்பட்டு கண்நீரோடு விடைகொடுக்கின்றோம்... வையகம் எனும் மைதானத்தில் வாழ்க்கையெனும் ஆட்டத்தில் அணைத்து ஆடுவதில் சிறந்த ஆட்டக்காரனான உனக்கு எங்களின் *standing ovation.*
Amongst many things, Vasu constantly worked hard for the enrichment of his alma mater for decades without expecting anything back. That exemplifies the spirit of giving. That's a teaching for all...