பிரபல பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, "பாசறைப் பாணர்" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.
தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாருக்கு விஜயா என்ற மனைவியும், இளங்கோவன் என்ற மகனும், தமிழ்க்கொடி, ராஜேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.
சிறுவயதிலேயே இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், தூத்துக்குடியில் புகழ்பெற்ற நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகக் குழுவில் இணைந்து தனது பயணத்தைத் தொடங்கினார். 1990-களில் யாழ்ப்பாணத்தில் ஐந்து லட்சம் மக்கள் முன்னிலையில் இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தமிழகத்திலும், லண்டன், பாரிஸ் போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது குரல் விடுதலைப் போராட்டத்தின் குரலாகவே பார்க்கப்பட்டது.
அவரது பாடல்கள் இன்றும் பல போராட்ட மேடைகளிலும், தமிழ் உணர்வு நிகழ்வுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவரது மறைவு தமிழ் தேசியக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
தனது வாழ்க்கை முழுவதும் மக்களின் மனங்களை வென்ற பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
பாசறைப் பாணரின் கணீரென்ற குரலோசை - தமிழ்
மண்ணின் எழுச்சியை உலகிற்குச் சொன்னது!
தாயக உணர்வை நெஞ்சங்களில் விதைத்தவர் - தன்
இன்னிசை பாடலால் வரலாற்றில் நிலைத்தவர்;
மறையாத புகழுடன் என்றும் வாழ்வார்!
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்றில் பாசறை பாணர்க்கு ஈழ மக்களின் கண்ணீர் அஞ்சலி