கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை தேவராசா அவர்களின் நன்றி நவிலல்.
சமர்ப்பணம்
இவ்வுலகில் எமது குடும்ப நல்வாழ்விற்காக
குடும்பத்தின் ஒளி விளக்காய் திகழ்ந்து
அன்போடும் பண்போடும் பாசத்தோடும்
தந்தையாய் உற்ற துணையாய் புவிதனில்
வாழ்ந்து
முறையான கல்வி புகட்டி
தன்னலம் பாராது அல்லும் பகலும்
அயராது உழைத்து மெழுகாய் உருகி
அணைந்து இறைவனோடு கலந்திட்ட
எங்கள் குடும்ப குத்து விளக்கின் பாதங்களில்
உன்னத நினைவோடும் எங்கள் மனவலைகளில்
எழும் எண்ணங்களில் மலர்களாக்கி
சமர்ப்பணம் செய்கிறோம்.
ஆண்மக்கள் புலம்பல்
ஜெலான், பர்வின் அபிசேக், பிரவீன்
பண்பாடு என்னவென்று அப்பா நீங்கள்
பக்குவமாய் சொல்லி வைத்தீர்
பாசமது என்னவென்று அப்பா உன்
பார்வையிலே கண்டு கொண்டோம்
சோர்வில்லா இருந்தோமே அப்பா நாங்கள்
சோர்ந்துதான் போனமப்பா
ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் நாங்கள்
ஓடித்திரிந்தோமே - இப்போ
குற்றுயிராய் கூனிக்குறுகி விட்டோமே அப்பா
வாழ்க்கையிலே நாம் உயர
அடித்தளமாய் இருந்தீரே அப்பா
சிறகொடிந்த பறவையைப் போல
சீரழிந்து போனமப்பா
உயிரினும் மேலாக எம்மையெல்லாம்
உளமார நேசித்தீரே அப்பா
பாழ்பட்ட விதிவந்து
பரலோகம் போனதென்ன
தேற்றுவோர் எவர் இருந்தாலும்
அப்பா உன் திருமுகம் போல வருமா!
உம் கனவை நனவாக்கி
வாழ்க்கையில் உயர்ந்திடுவோம் அப்பா.
பொழுது புலரும் வேளை உம் திருமுகம் கண்டு என் விழி பூக்கும். இருவிழி ஒரு ஒளியாகப் பிரகாசித்துக் கொள்ளும் வேளையில், இப்பிரகாச ஒளி ஏன் பிரகாசிக்கவில்லை எனப்புரியவில்லை. அச்சமில்லை அச்சமில்லை என்று வீர நடை போட்டு அஞ்சா நெஞ்சுடன் என் பழுவை தன் தோள் மேல் சுமந்து, என்னுடன் கூட நின்று தேவையனைத்தும் பூர்த்திசெய்யும் போது இடர்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் ஆறுதல் மொழி கூறுவதுடன் நகைச்சுவை பேசி ஆறுதல் கூறுவீர்களே, எந்தவொரு பிரச்சனை யாருக்கு ஏற்பட்டபோதெல்லாம் சொந்தப் பிரச்சனை என்று எண்ணி அங்கு சென்று இடர்பாடு தீர்ப்பது மட்டுமல்ல சொந்த வியர்வையை எத்தனையோ பேரின் வாழ்விற்கு நீராக வழங்கி வாழ்வு அளித்த என்னுயிரே செய்த நன்மைகளனைத்தும் வார்த்தையால் வடிக்க முடியவில்லை . எதுவுமே பேசாது ஆணிவேரில்லா மரமாகத் தவிக்கவிட்டு சென்றதை நானறியேன். உம் உயிர் உள்ள வரைக்கும் என் விழிநீர் கண்டதில்லை. ஆனால் அவற்றை ஊற்றாக்கிவிட்டுச் சென்ற தென்னவெனப் புரியவில்லையப்பா.
“என்னுயிர் காத்து தன்னுயிர் மாய்த்துக் கொண்ட
என்துணையாளனுக்கு கண்ணீருடன் கூடிய புலம்பல்கள்"
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி ஈடேற்றத்திற்கான நினைவு கூறல் திருப்பலி 26-01-2022 புதன்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் மல்லாகம் சதா சகாய மாதா ஆலயத்தில் நடைபெறும். இத்திருப்பலியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதோடு , 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியிலிருந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசன விருந்திலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.