யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Cornwall, Hamilton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிந்த சுப்பிரமணியம் குணரத்தினம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சீரோடு வாழ்ந்து சிந்தை நிறைந்திருந்த குணம் அண்ணாவே!
ஊரோடு சேர்ந்து இம்முறை அன்னையின் தேர் இழுத்த உத்தமரே
வேரோடு சாய்ந்து நிழல் தந்த இவ் விருட்ஷம் விழுந்ததே
யாரோடு கூடி இனி எமை தேற்றுவோம் எம் தாயே மாரியம்மா.
தட்டி கொடுத்து தடவி அரவணைத்து தமது உற்றோரை
கட்டி அணைத்து ஊர் செழிக்க நல் அறிவுரைகள் பல கூறி
எட்டி நின்று ஏளனம் செய்யும் எம்மவர் மத்தியிலே - மார்
தட்டி எம் மக்களை கவர்ந்த குணம் அண்ணாவை
நாம் இழந்தோம் தாயே மாரியம்மா.
பத்து நாள் திருவிழாவில் இம்முறை கோடை பகலவனாய் நீ ஒளிர்ந்தாய்
முத்து நிறை சிப்பிபோல மன உவகையோடு நாம் இருந்தோமே
செத்து நீ மடிந்த செய்தி பேரிடியாய் எம் தலையில் விழுந்ததே
பித்து பிடித்து பிதற்றுகிறோம் என் செய்வோம் தாயே மாரியம்மா.
சிங்க வாகனமேறி சிங்கார அழகொளிர அகிலலோக நாயகி
தங்க நகை மேனியெல்லாம் மின்னி பெருங்காடே தக தகக்க
அங்க மெல்லாம் சிலிர்க்க அவளை அனைவரும் துதித்திருக்க
பங்க மென ஆனதம்மா ஏனிந்த பாரபட்ஷம் எம் தாயே மாரியம்மா.
ஏற்றிய கற்பூரம் எம்மவர்க்காய் எரிந்து மறைந்ததுபோல் - பறை
சாற்றிய வள்ளலே முடிவினில் ஏதும் மீதமில்லை யாமறிந்தோம்
ஆற்றிய உன் பணிகளை மாசற ஆற்றுவதே எம் கடமை - நாம்
போற்றிய தாயே அண்ணல் ஆத்மா சாந்திபெற அருள்வாய் தாயே மாரியம்மா.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயம்
வட்டாரம் - 03, புங்குடுதீவு.
our thoughts are with family and friends we know him for a long period and he is a true gentleman.