யாழ். வேலனை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போது வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் நாகராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அரிவரி தன்னில் ஆனாச் சுழித்து எழுதிய நாள் முதல்
அன்புக் கினியனாய் ஆரத்தழுவி அணைத்திட்ட நண்பனே!
என்பும் கனிந்திடும் இன் சொலதனால் கவர்ந்திட்ட சுபாசே!
நின்தன் பிரிவதால் நெஞ்சம் கனன்று நெக்குருகித் தவிக்கிறது.
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண்
களைகின்ற நட்பதுவாய் வாழ்ந்திட்ட காலம் வரை
புலத்தில் மட்டுமன்றி புலம் பெயர் மண்ணிலும்
நட்பின் திறன் காத்து நின்ற என் ஆருயிர் நண்பனே!
கூடிக் குலவி ஒன்றாய்த் திரிந்த பள்ளிக் காலங்களோடு
பாரிசில் பல்லாண்டுகள் ஒன்றாய் இருந்த காலங்கள் தாமும்
நெஞ்சினில் நினைவாய் வந்து நித்தம் மலர்ந்திட
நெருஞ்சி முள்ளாய் அவை வந்து வதைக்குது நண்பா!
உந்தன் அழகிய வதனமும் ஆளுமைத் தன்மையும்!
பாசம் தனைப் பொழியும் பண்புறு வார்த்தையும்!
நிந்தன் பிறர்க்குதவிடும் பெருந்தகைக் குணமும்!
மனிதம் நிறைந்த மாண்புறு செயல்களும்!
அகத்தொடு முகமது மலர அணைத்திடும் பண்பும்!
நின்னை உயர்த்திட வாழ்வினில் ஒளிர்ந்தவா! மீண்டுவாரா!
நின் இழப்பால் கனத்த இதயத்தோடு விழியில் நீர் சுமந்து!
ஆற்றொணாத் துயருறும் மனையொடும்! மக்களோடும்!
தந்தை, தாய் மற்றுமுள சுற்றத்தோடும்!
துயரது பகிர்ந்து ஆத்ம சாந்திக்காய் வங்களாவடி
முருகனவன் தாள் பணிந்து வேண்டுகின்றோம்.
பிரிவால் துயருறும் நண்பன் ரவி குடும்பத்தினர்,
பிரான்ஸ்.