அனலையின் அன்பு மகன் நீ! அனைவர்க்கும் சொந்த மகன் நீ! மண் மீதும், மக்கள் மீதும் மாறா விருப்பு கொண்டவன் நீ, சிவப்பிரகாசமும் பொன்னாச்சியும் பெற்றெடுத்த சீராளன் நீ! காராளபிள்ளை என பெயர் பெற்றாய் நீ! ஆனால் பார் போற்றும் பிள்ளை நீ! நீ புத்தகத்தைத் திறந்ததை அறியோம் நாம், ஆனால் மடை திறந்த வெள்ளம் போல் உலக சரித்திரத்தை உன்னதமாய் கற்பித்தாய்! அன்றைய காலங்களில் நல்லாசான் நீ! இறுதிக் காலங்களில் நல்நண்பன் ஆனாய் நீ! நீ சென்ற இடமெல்லாம் செம்மொழியாம் எம்மொழியால் தெவிட்டா வண்ணம் தெளிவுற உரைத்திடுவீர். ஆண்டமொழி ஆங்கிலத்தை அழகாக உச்சரித்து அதையும் புலமையுடன் அள்ளித் தெளித்திடுவீர். எத்தனை மேடை கண்டாய், எத்தனை உரை தந்தாய். அத்தனையும் உம்மை உயரத்தில் உயர்த்தியதே! உன்னால் உயர்ந்தோம் நாமும்! நீ வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் எனும் போது எம்மை விட மகிழ்வடைவோர் இனி யாரும் உளாரோ! சதாசிவன்மலர் கண்டாய்! சரித்திரத்தில் இடம் கொண்டாய்! உலகுள்ளவரை எங்கள் அனலைத் தாயின் மகுடத்தில் அணி சேர் முத்தாய் ஒளிர்வாய் நீ!!! என் தந்தைக்கு தோழன் நீ! எனக்கோ நல்லாசான் நீ! தந்தையும் நீ! நண்பனும் நீ! உனது குறுந்தாடியும், குறுஞ்சிரிப்பும், குறுங்கதைகளும், குறும்புகளும், குன்றாத குணமும், என்றும் மாறா இளமை முகமும், மாறாத மனமும் மறக்குமா மன்னவா! உன்னை காலத்தின் கோலத்தால் கடைசியிலே காணவும் முடியவில்லை. ஆனாலும் அனலையின் அன்பு மைந்தா இன்றல்ல என்றும் எம் உள்ளங்களில் இருப்பாய் நல்நினைவுகளுடன்!!! உம்மை இழந்து துயருற்று இருக்கும் உன் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், ஊரார்கள், அனைவருக்கும் எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனாரைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
We want to express our sympathy and let you know that our thoughts are with you.